பன்றிக்காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

பன்றிக்காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.

Update: 2017-02-03 23:00 GMT
திருவள்ளூர்,

பன்றிக்காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் எனவும், அரசு, அதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

அமைச்சர் ஆய்வு

திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வந்தார். மருத்துவமனையின் பல்வேறு இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அங்கு இருந்த நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

பீதி அடைய வேண்டாம்

தமிழக அரசு பன்றிக்காய்ச்சலை கட்டுப்படுத்த தேவை யான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. இது குணப்படுத்தக்கூடிய காய்ச்சல் தான். எனவே பொதுமக்கள் காய்ச்சல் குறித்து பீதியோ பதற்றமோ அடைய வேண்டாம்.

தமிழகத்தில் 11 லட்சத்து 14 ஆயிரம் ‘டாமிபுளு’ மாத்திரைகளும், 31 ஆயிரத்து 272 மருந்துகளும், 10 ஆயிரத்து 649 மருத்துவ பாதுகாப்பு கவசங்களும் கையிருப்பில் உள்ளன.

பன்றிக்காய்ச்சலை கண்டறிவதற்கு தமிழகத்தில் சிறப்பு மையங்களான கிண்டி கிங் நோய் தடுப்பு மருந்து மற்றும் ஆராய்ச்சி நிலையம் உள்பட ஆறு ஆய்வு மையங்களும், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஒரு ஆய்வு மையமும் மற்றும் 13 தனியார் ஆய்வு மையங்களும் செயல்படுகின்றன.

அரசு மருத்துவமனையில் சிகிச்சை...

அரசு மருத்துவ நிலையங்களில் பன்றிக்காய்ச்சல் பரிசோதனைகள் முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது.

நோய் அறிகுறிகளுடன் உள்ள நபர்கள் தாங்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

தனியார் மருத்துவர்கள் பன்றிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு வகுக்கப்பட்ட முறையில் மட்டுமே பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

இலவச தொலைபேசி எண்கள்

பொதுமக்கள் காய்ச்சல் குறித்து 24 மணிநேரமும் மருத்துவ ஆலோசனைகள் பெறும் வகையில் தகவல் மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதற்காக 044 – 24350496, 24334811, மற்றும் 9444340496, 9361482899 ஆகிய இலவச தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தேவை யான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் தகவல் பெற 104 என்ற சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஆய்வின்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, அ.தி.மு.க திருவள்ளூர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பலராமன், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்