வீட்டு மனை தகராறில் பெண் அடித்துக்கொலை
வானூர் அருகே வீட்டுமனை தகராறில் பெண் அடித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடிய அவர்களது மகனை போலீசார் தேடி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா காரட்டை கிராமம் மாரியம்மன் கோவில்தெருவை சேர்ந்தவர் ராஜகோபால்(வயது48). இவருடைய மனைவி இந்திரா(45). இவர்களது வீட்டின் அருகில் வசிப்பவர் சரவணன். இவருடைய மனைவி வசந்தா(50). ராஜகோபாலுக்கும் வசந்தாவுக்கும் இடையே வீட்டு மனை தகராறு இருந்து வந்தது.
இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் கிளியனூர் போலீசில் ஒருவர் மீது ஒருவர் தொடர்ந்து புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து கிளியனூர் போலீசார் அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்துவதற்காக நேற்று மாலை போலீஸ்நிலையத்திற்கு வருமாறு கூறி இருந்தனர்.
அதற்காக வசந்தா வீட்டில் இருந்து புறப்பட்டு காரட்டை பஸ்நிலையத்திற்கு நடந்து வந்து கொண்டு இருந்தார்.
அடித்துக்கொலைஅப்போது ராஜகோபால், அவருடைய மனைவி இந்திரா, மகன் சந்தோஷ்குமார் ஆகிய மூவரும் கையில் உருட்டுகட்டை, மற்றும் இரும்புகம்பி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் ஓடி வந்து வசந்தாவை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடினார்கள்.இதனால் நிலைகுலைந்து போன வசந்தா ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இந்த சம்பவத்தை கண்ட அந்தவழியாக வந்தவர்கள் வசந்தாவை மீட்டு சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.ஆனால் சிகிச்சை பலனின்றி இரவு வசந்தா பரிதாபமாக இறந்தார்.
கணவன், மனைவி கைதுஇந்த சம்பவம் குறித்து வசந்தாவின் மகன் கருணாகரன் கிளியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்சுதர், சப்–இன்ஸ்பெக்டர் ராஜூ ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, அப்பகுதியில் உள்ள சவுக்கு தோப்பில் பதுங்கி இருந்த ராஜகோபால், அவருடைய மனைவி இந்திரா ஆகிய இருவரையும் கைது செய்தனர். தப்பி ஓடிய சந்தோஷ்குமாரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.