நிலத்தடிநீர் 300 அடிக்கும் கீழ் சென்றுவிட்டதாக ஆய்வில் தகவல்

கடவூர் பகுதியில் நிலத்தடிநீர் 300 அடிக்கும் கீழ் சென்றுவிட்டதாக ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2017-01-28 22:45 GMT
தரகம்பட்டி,

ஆய்வு

கரூர் மாவட்டத்தில் கடைக்கோடி ஒன்றியமாக கடவூர் உள்ளது. இந்த பகுதி விவசாயம் நிறைந்த பகுதி யாகும். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு முப்போகம் விளைந்த இங்கு இப்போது ஒருபோகத்திற்கே தள்ளாடுகின்றது. பருவமழை பொய்த்துவிட்டதால் கடவூர் பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இந்த பகுதியில் நிலத்தடிநீர் வெகுவாக குறைந்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர் குமார் தலைமையில் விஞ்ஞானிகள் ராஜ்குமார், பஹாரி, சந்தீப்குப்தா, பேராசிரியர்கள் பிரபாகரன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் 42 மாணவ-மாணவிகள் கடவூர் பகுதியில் குடிநீர் சூழ்நிலை எப்படி உள்ளது என்பது குறித்து ஜியோமெட்டிக்கல் கருவிகள் மூலம் நீரோட்டத்தன்மை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

கடும் வறட்சி

இதுகுறித்து பேராசிரியர் குமார் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த வறட்சிக்கு காரணம் போதிய பருவமழை இல்லாதது தான். அதிலும், கரூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும் சூழ்நிலை உண்டாகும். அதிலும், கடவூர் மிகவும் பின்தங்கியுள்ளது. இந்த பகுதியில் நிலத்தடிநீர் 300 அடிக்கும் கீழ் சென்றுவிட்டது. இதுவே, ஏப்ரல், மே மாதங்களில் நிலத்தடிநீர் வேகமாக குறைந்து பொன்னணியாறு அணை வறண்டுபோகக்கூட வாய்ப்பு உள்ளது. ஜூன், ஜூலை மாதங்களில் குடிப்பதற்கு கூட நீர் கிடைக்காத சூழ்நிலை ஏற்படும். இதனை சரிசெய்வதற்கு அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் ஜியோமெட்டிக்கல் கருவிகள் மூலம் கடவூர் மலைப்பகுதிகளில் நீரோட்டத்தை ஆய்வு செய்து வருகிறோம். எங்கு குடிநீர் அதிகம் உள்ளது என்பதை ஆராய்ந்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முயற்சி செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்