முறைகேடு குறித்து விவாதத்திற்கு மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தயாரா? பா.ஜனதா சவால்
குப்பையை நிர்வகிப்பதில் நடந்துள்ள முறைகேடு குறித்து விவாதத்திற்கு மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தயாரா? என்று பா.ஜனதா சவால்.;
பெங்களூரு
பெங்களூருவில் குப்பையை நிர்வகிப்பதில் நடந்துள்ள முறைகேடு குறித்து பகிரங்க விவாதத்திற்கு மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தயாரா? என்று பா.ஜனதா சவால் விடுத்துள்ளது.
பெங்களூரு மாநகராட்சி முன்னாள் பா.ஜனதா குழு தலைவர் என்.ஆர்.ரமேஷ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடுகுப்பைகளை அகற்றுதல் மற்றும் அவற்றை நிர்வகிப்பதில் கோடிக்கணக்கான ரூபாய் முறைகேடு செய்யப்படுகிறது என்று நான் முன்பு கூறினேன். இதை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் குறை கூறி இருக்கிறார். ஆனால் நான் கூறிய இந்த கருத்தில் இப்போதும் உறுதியாக உள்ளேன். இதுபற்றி பொது விவாதத்திற்கு நான் தயாராக உள்ளேன். இதற்கு மந்திரி கே.ஜே.ஜார்ஜ் தயாரா?.
பெங்களூரு மாநகராட்சியில் நிரந்தர துப்புரவு தொழிலாளர்களை தவிர ஒப்பந்த அடிப்படையில் 27 ஆயிரத்து 716 துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள் என்று தவறான தகவலை அளித்து மாநகராட்சியில் முறைகேடு செய்கிறார்கள். இது தொடர்பாக என்னிடம் ஆவணங்கள் உள்ளன. மந்திரி கே.ஜே.ஜார்ஜ் இந்த முறைகேட்டை தடுக்க முயற்சி செய்திருந்தால் ரூ.400 கோடி வரை மாநகராட்சி நிதியை மிச்சப்படுத்தி இருக்கலாம்.
முயற்சி செய்யவில்லைஅதே போல் அறிவியல் பூர்வமாக குப்பை கிடங்கு அமைக்க ரூ.410 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த தகவலும் தவறானது. இந்த முறைகேடுகளை தடுக்க மந்திரி கே.ஜே.ஜார்ஜ் எந்த முயற்சியும் செய்யவில்லை. அதை விடுத்து நான் கூறிய விவரங்களை குறை சொல்கிறார். என்னிடம் இருக்கும் ஆவணங்கள் அனைத்தும் முதல்–மந்திரிக்கும் அனுப்பி இருக்கிறேன்.
இவ்வாறு என்.ஆர்.ரமேஷ் கூறினார்.