கும்பாபிஷேக விழாவுக்கு சென்று திரும்பியபோது மரத்தில் கார் மோதல்; சிறுவன் உள்பட 2 பேர் பலி

கும்பாபிஷேக விழாவுக்கு சென்று திரும்பியபோது மரத்தில் கார் மோதியதில் சிறுவன் உள்பட 2 பேர் பலியானார்கள்.

Update: 2017-01-26 19:38 GMT
கம்பம்,

மரத்தில் கார் மோதல்

தேனி மாவட்டம் கம்பம் ஆலமரத்தெருவை சேர்ந்தவர் தெய்வேந்திரன் (வயது 53). நேற்று இவர் தனது உறவினர்கள் 7 பேருடன் சின்னமனூர் அருகே உள்ள அம்மாபட்டியில் நடந்த கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்வதற்காக காரில் சென்றார்.

பின்னர் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொண்டுவிட்டு அவர்கள் கம்பத்திற்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர். காரை தெய்வேந்திரன் ஓட்டினார். கம்பம்-குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலையோரம் உள்ள புளியமரத்தில் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

2 பேர் பலி

இதில் காரில் பயணம் செய்த சுருளிப்பட்டியை சேர்ந்த ராஜேஸ்கண்ணன் (36), கம்பம் நந்தகோபால் சுவாமி கோவில் தெருவை சேர்ந்த சிவக்குமார் மகன் ரோஹித் (8) ஆகியோர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள். மேலும் டிரைவர் தெய்வேந்திரன், காரில் சென்ற கம்பம் சுக்காங்கல்பட்டி தெருவை சேர்ந்த ராமராஜ் மனைவி பவுன்தாய் (65), காஞ்சனா (27), சிவக்குமார் மனைவி தீபா (40), ராஜி (55), சுருளிப்பட்டியை சேர்ந்த விக்னேஷ்வரன் மகன் தர்சின் (12) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இது குறித்து தகவலறிந்த கம்பம் வடக்கு போலீசார் விரைந்து சென்று படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர்களின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பினர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்