பெங்களூரு தமிழ்ச்சங்கம் சார்பில் தமிழர்–கன்னடர் ஒற்றுமை பேரணி முன்னாள் எம்.பி. தருண் விஜய் தொடங்கி வைத்தார்

பெங்களூரு தமிழ்ச்சங்கம் சார்பில் நேற்று நடந்த தமிழர்–கன்னடர் ஒற்றுமை பேரணியை முன்னாள் எம்.பி. தருண் விஜய் தொடங்கி வைத்தார்.

Update: 2017-01-22 21:30 GMT
பெங்களூரு,

பெங்களூரு தமிழ்ச்சங்கம் சார்பில் நேற்று நடந்த தமிழர்–கன்னடர் ஒற்றுமை பேரணியை முன்னாள் எம்.பி. தருண் விஜய் தொடங்கி வைத்தார்.

 திருவள்ளுவர் தின விழா

பெங்களூரு தமிழ்ச்சங்கம் சார்பில் திருவள்ளுவர் தினத்தையொட்டி ஆண்டுதோறும் திருவள்ளுவர் தின விழா மற்றும் தமிழர்–கன்னடர் ஒற்றுமை பேரணி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 8–வது ஆண்டு திருவள்ளுவர் தின விழா மற்றும் தமிழர்–கன்னடர் ஒற்றுமை பேரணி நேற்று பெங்களூரு அல்சூர் ஏரிக்கரையில் உள்ள திருவள்ளுவர் சிலை முன்பாக நடைபெற்றது. திருவள்ளுவர் தின விழாவுக்கு நிடுமாமிடி மடத்தின் மடாதிபதி வீரபத்ர சன்னமல்ல தலைமை தாங்கியதுடன், திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விழாவுக்கு வந்தவர்களை தமிழ்ச்சங்க தலைவர் தி.கோ.தாமோதரன் வரவேற்றார்.

பின்னர் விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட மந்திரிகள் கே.ஜே.ஜார்ஜ், ரோ‌ஷன் பெய்க், பா.ஜனதா முன்னாள் எம்.பி. தருண் விஜய், பி.சி.மோகன் எம்.பி., பெங்களூரு மாநகராட்சி மேயர் பத்மாவதி, கவுன்சிலர்கள் மம்தா சரவணா, சிவபிரகாஷ், முன்னாள் கவுன்சிலர்கள் தன்ராஜ், சரவணா, கர்நாடக மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பிரகாசம் ஆகியோர் திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

தமிழர்–கன்னடர் ஒற்றுமை பேரணி

அதன்பிறகு, கன்னடத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறள் புத்தகத்தை மந்திரி கே.ஜே.ஜார்ஜ் வெளியிட, அதனை பி.சி.மோகன் எம்.பி., பெங்களூரு மாநகராட்சி மேயர் பத்மாவதி பெற்றுக் கொண்டனர். அதைத்தொடர்ந்து, தமிழர்–கன்னடர் ஒற்றுமை பேரணியை முன்னாள் எம்.பி. தருண் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு இருந்த திருவள்ளுவர் சிலையுடன் அல்சூர் ஏரிக்கரையில் இருந்து பேரணி தொடங்கியது.

பேரணியில் பள்ளிக்கூட மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். கர்நாடக தேவர் சங்கம், திருநெல்லை விஸ்வகர்மா முன்னேற்ற சங்கம், ஆதர்ஷா ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம், தமிழ் அமைப்புகள், ரசிகர் மன்றங்கள் சார்பிலான வாகனங்கள் பேரணியில் கலந்து கொண்டன. பேரணியில் நாட்டுப்புற கலையான டொள்ளு–குனிதா, மயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தது. திருவள்ளுவர் சிலையில் இருந்து தொடங்கிய பேரணி கமர்சியல் தெரு, காமராஜர் ரோடு, சிவன்ஷெட்டி கார்டன், ஆஸ்பான் ரோடு, அண்ணாசாமி முதலியார் ரோடு, தமிழ்ச்சங்கம் வழியாக மீண்டும் திருவள்ளுவர் சிலையை வந்தடைந்தது.

திருவள்ளுவர் பெரிய மகான்

முன்னதாக மந்திரி கே.ஜே.ஜார்ஜ் பேசுகையில், “திருவள்ளுவர் பெரிய மகான். அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியது மிகுந்த சந்தோ‌ஷத்தை கொடுக்கிறது. நாம் அனைவரும் முதலில் இந்தியர். நமக்குள் சாதி, மொழி பேதம் இல்லை. ஒரு மனிதன் தனது வாழ்நாளில் எப்படியெல்லாம் வாழ வேண்டும் என்பதற்கான அனைத்தையும் திருக்குறள் மூலம் திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார். திருவள்ளுவர் கூறியபடி ஒவ்வொருவரும் வாழ வேண்டும்,“ என்றார்.

இதுபோன்று, மாநகராட்சி மேயர் பத்மாவதி பேசும் போது, “ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை திருவள்ளுவர் தான் எழுதிய 1,330 குறள் மூலம் சொல்லி இருக்கிறார். பிரம்மன் படைத்த அவதாரம் திருவள்ளுவர். திருக்குறளை மகாத்மா காந்தியடிகளே பாராட்டி உள்ளார். பெங்களூருவில் தமிழர்கள், கன்னடர்கள் என்ற வேற்றுமையை மறந்து அண்ணன், தம்பியாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார்கள். மனிதராக பிறந்த அனைவரும் திருக்குறளை கடைபிடித்து வாழ்ந்தால், வாழ்வில் வெற்றி பெறலாம்,“ என்றார்.

ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்

இந்த விழாவில் திருநெல்லை விஸ்வகர்மா முன்னேற்ற சங்கத்தின் தலைவர் ஆறுமுகம், செயலாளர் தங்கம், பொருளாளர் முத்துராமன், இணைத்தலைவர் அழகுராஜ், கர்நாடக இந்து நாடார் அசோசியேசன் தலைவர் ராஜாமணி, துணைத்தலைவர் சுரேஷ்குமார், முன்னாள் தலைவர் பாலசுந்தரம், கர்நாடக தேவர் சங்க தலைவர் ஞானகுரு, துணைத்தலைவர் பாபு கே.தேவர், செயலாளர் மணிகண்டன், கர்நாடக மாநில அ.தி.மு.க. செயலாளர் வா.புகழேந்தி, அம்பேத்கர் சட்டக்கல்லூரி முதல்வர் ராமமூர்த்தி, லிட்டில் பிளவர் உயர் நிலைப்பள்ளியின் செயலாளர் மதுசூதனபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

திருவள்ளுவர் தினவிழா, தமிழர்–கன்னடர் ஒற்றுமை பேரணியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து கலந்து கொண்டார்கள். இதற்கான ஏற்பாடுகளை பெங்களூரு தமிழ்ச்சங்க தலைவர் தி.கோ.தாமோதரன், துணை தலைவர் தாமோதரன், செயலாளர் ராமசுப்பிரமணியன், பொருளாளர் பத்மநாபன், செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் மற்றும் தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் செய்திருந்தார்கள்.

மேலும் செய்திகள்