மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல்

மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து பெரம்பலூர் மகிளா கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2017-01-19 22:15 GMT
பெரம்பலூர்,

பாலியல் பலாத்காரம்

பெரம்பலூர் வடக்குமாதவி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் சோலைமுத்து. இவருடைய மகன் சரத்குமார் (வயது 23). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 7-3-2015 அன்று வேப்பந்தட்டை தாலுகா பெரியவடகரை பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றார். அப்போது அங்கு ஒரு வீட்டில் 11-ம் வகுப்பு மாணவி தனியாக இருப்பதை அறிந்த சரத்குமார் அந்த வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து அந்த மாணவி தனது பாட்டியிடம் கூறி கதறி அழுதார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக “போக்சோ” சட்டத்தின் கீழ் சரத்குமாரை கைது செய்தனர்.

10 ஆண்டு கடுங்காவல்

மேலும் சரத்குமார் மீது பெரம்பலூர் மகிளா கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகாந்த் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சரத்குமாருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 1 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட மாணவியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்காக 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 3 மாத சிறை தண்டனையும் விதிக்கப்படுகிறது. இந்த தண்டனையை சரத்குமார் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து போலீசார் சரத்குமாரை வேனில் அழைத்து சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்