கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லைக்கு வந்தது

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் நேற்று காலை தமிழக எல்லையை வந்தடைந்தது.

Update: 2017-01-19 21:45 GMT
செங்குன்றம்,

கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர் நேற்று காலை தமிழக எல்லையை வந்தடைந்தது.

நதிநீர் பங்கீடு

கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின் கீழ் ஆந்திர அரசு ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்துக்கு வழங்க வேண்டும். இந்த நிலையில் பருவமழை பொய்த்ததால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது.

இதனை கருத்தில் கொண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தின்படி தண்ணீர் திறந்து விடவேண்டும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த 9-ந்தேதி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் திறக்கப்பட்டது.

கூடுதல் தண்ணீர் திறக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடுவிடம் கோரிக்கை விடுத்தார். இதை தொடர்ந்து பூண்டி ஏரிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது.

மதகுகள் திறப்பு

தற்போது வினாடிக்கு 1,700 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிருஷ்ணா கால்வாய் ஓரங்களில் உள்ள 800-க்கும் மேற்பட்ட மதகுகளை ஆந்திர விவசாயிகள் திறந்து தண்ணீரை தங்களுடைய விளை நிலங்களுக்கு பாய்ச்சி விட்டதால் தமிழக எல்லைக்கு தண்ணீர் வந்து சேருவதில் தாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர மாநிலம் சென்று திறக்கப்பட்ட மதகுகளை மூடும்படி அங்குள்ள விவசாயிகளிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணிக்கு கிருஷ்ணா நதி நீர் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டை வந்தடைந்தது. வினாடிக்கு 5 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்த தண்ணீர் இன்று பூண்டி ஏரியை சென்றடைய வாய்ப்பு உள்ளது. பூண்டி ஏரியின் உயரம் 35 அடி. 3 ஆயிரத்து 231 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். நேற்று காலை 6 மணி நிலவரப்படி 22.78 அடி நீர்மட்டம் பதிவானது. 550 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது. பூண்டி ஏரியில் இருந்து மெட்ரோ வாட்டர் போர்டுக்கு 21 கனஅடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. 

மேலும் செய்திகள்