குடியரசு தின பாதுகாப்பு பணிக்காக தூத்துக்குடிக்கு வந்த ‘ஹோவர்கிராப்ட்’ ரோந்து படகு

குடியரசு தினத்தை முன்னிட்டு, கடல்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தூத்துக்குடிக்கு, கடலோர காவல்படையின் ‘ஹோவர் கிராப்ட்’ ரோந்து படகு நேற்று கொண்டு வரப்பட்டது.

Update: 2017-01-19 21:00 GMT
தூத்துக்குடி,

குடியரசு தினத்தை முன்னிட்டு, கடல்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தூத்துக்குடிக்கு, கடலோர காவல்படையின் ‘ஹோவர் கிராப்ட்’ ரோந்து படகு நேற்று கொண்டு வரப்பட்டது.

பாதுகாப்பு

குடியரசு தினம் வருகிற 26-ந் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதனை சீர்குலைக்கும் வகையில் பயங்கரவாதிகள் முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்தக்கூடும் என்று மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதையொட்டி கடலோரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம், திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் மற்றும் கடற்கரையோரம் உள்ள முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ரோந்து படகு

இந்த நிலையில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடலோர காவல்படையின் ரோந்து கப்பல்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. அந்த வகையில் மண்டபம் கடலோர காவல்படைக்கு சொந்தமான தண்ணீரிலும், தரையிலும் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்ட ‘ஹோவர் கிராப்ட்’ ரோந்து படகு நேற்று மதியம் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு இந்த படகு பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இந்த படகு இங்கிலாந்தில் உள்ள நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 20 மீட்டர் நீளமும், 30 டன் எடையும் கொண்டது. இந்த ரோந்து படகு மணிக்கு 45 கடல்மைல் வேகத்தில் செல்லக்கூடியது. இந்த படகு கண்காணிப்பு மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளது.

நவீன கருவிகள்

இந்த ரோந்து படகில் 11 கடலோர காவல்படை வீரர்கள் உள்ளனர். இவர்கள் நவீன கருவிகள் மற்றும் ஆயுதங்களுடன் கண்காணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். மண்டபத்தில் இருந்து ரோந்து பணியை தொடங்கினர். கடற்கரையோரம் தொடர்ந்து கண்காணித்தப்படி நேற்று மதியம் தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கள் தூத்துக்குடி கடலோர காவல்படையினருடன் ஆலோசனை நடத்தினர். இந்த ரோந்து படகு இன்று(வெள்ளிக்கிழமை) அதிகாலையில் புறப்பட்டு திருச்செந்தூருக்கு செல்கிறது. பின்னர் திருச்செந்தூர் கடற்கரையில் படகு நிறுத்தப்படும். அந்த பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் இந்த படகு ஈடுபடுத்தப்பட உள்ளது. தூத்துக்குடி கடற்கரையில் நிறுத்தப்பட்டு உள்ள இந்த படகை அந்த பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

மேலும் செய்திகள்