கோவில்பட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 1,000 பேர் கைது

கோவில்பட்டி அருகே சாலைமறியலில் ஈடுபட்ட 1000-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-01-19 20:30 GMT
கோவில்பட்டி,

கோவில்பட்டி அருகே சாலைமறியலில் ஈடுபட்ட 1000-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

சாலை மறியல்

கோவில்பட்டி தாலுகா காமநாயக்கன்பட்டி பிர்காவில் உள்ள காமநாயக்கன்பட்டி, குருவிநத்தம், அச்சங்குளம், முடுக்கலாங்குளம் ஆகிய 4 பஞ்சாயத்துகளைச் சேர்ந்த 9 கிராமங்களை புதிதாக அமையவுள்ள கயத்தாறு தாலுகாவுடன் இணைக்க கூடாது என்று வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி, நேற்று காலையில் கோவில்பட்டி- பசுவந்தனை ரோடு குருவிநத்தம் விலக்கு பகுதியில் பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதில் காமநாயக்கன்பட்டி, எட்டுநாயக்கன்பட்டி, குருவிநத்தம், இலந்தபட்டி, அச்சங்குளம், செவல்பட்டி, சால்நாயக்கன்பட்டி, கோட்டையூர், முடுக்கலாங்குளம் ஆகிய 9 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

1,000 பேர் கைது

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு முருகவேல், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜூடி (நாலாட்டின்புத்தூர்), ராஜேஷ் (மேற்கு) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அவர்கள் கலைந்து செல்லவில்லை. அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர்.

பின்னர் மதியம் 3 மணியளவில் பொதுமக்கள் சாலையில் சாமியானா பந்தல் அமைக்க ஏற்பாடு செய்தனர். இதையடுத்து சாலைமறியலில் ஈடுபட்ட ஏராளமான பெண்கள் உள்பட 1,000-க்கு மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து, அங்குள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்தனர். கிராம மக்களின் போராட்டத்துக்கு ஆதரவாக அப்பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

மேலும் செய்திகள்