ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் இன்று கடைகள் அடைப்பு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் கடைகள் கடைகள் அடைப்பு;

Update: 2017-01-19 22:30 GMT
கடலூர்

கடைகள் அடைப்பு

ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இந்நிலையில் மாணவர்களின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்கோரி மத்திய அரசு அவசர சட்டம் இயற்ற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை) கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 70 ஆயிரம் கடைகள் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களின் மண்டல தலைவர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

பேரணி

மேலும் இந்த போராட்டத்தையொட்டி பண்ருட்டி சோமேஸ்வரர்கோவிலில் இருந்து பஸ் நிலையம் வரை பேரணியாக வந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் வணிகர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

ஸ்ரீமுஷ்ணத்தில் நகர வர்த்தக நலச்சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தலைவர் சிவா தலைமை தாங்கினார். செயலாளர் பன்னீர்செல்வம், பொருளாளர் தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து கடைகளையும் அடைத்து மாலை 5 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

மனித சங்கிலி

அதேபோல் கடலூர் அனைத்து வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் முத்துக்குமரனார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடலூரில் இன்று (புதன்கிழமை) அனைத்து கடைகளும் அடைக்கப்படுகிறது. காலை 9 மணிக்கு முதுநகர் மணிக்கூண்டில் இருந்து போலீஸ் நிலையம் நிலையம் வரை மனித சங்கிலி போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்தில் வணிகர் சங்க நிர்வாகிகளுடன், துறைமுகம் பக்தவத்சலம் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் சங்கம், காய்,கனி வியாபாரிகள் சங்கம் மற்றும் பொது நல அமைப்பினர் கலந்து கொள்கிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் பங்கு

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடலூர், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 160 பெட்ரோல் பங்க்குகளும் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்காது என்று தென்னாற்காடு மாவட்ட பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்க துணை தலைவர் ராமலிங்கம் அறிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்