ஓமலூர் அருகே, வீட்டின் மொட்டை மாடியில் பெண் கொடூரக்கொலை

ஓமலூர் அருகே வீட்டின் மொட்டை மாடியில் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

Update: 2017-01-19 22:30 GMT
ஓமலூர்,

கணவரை பிரிந்து வாழ்ந்த பெண்

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள சர்க்கரைசெட்டிபட்டி ஊராட்சி வேங்கானூர் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி காமாட்சி. இவர்கள் தற்போது ஓமலூரில் கண்ணனூர் மாரியம்மன் கோவில் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றனர்.

இவர்களுடைய மகள் தங்கமணி(வயது 30). இவருக்கும் தர்மபுரி மாவட்டம் ஜருகுமலையை சேர்ந்த கணேசன்(38) என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர் தன்னுடைய கணவர் மற்றும் குழந்தைகளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து வாழ்ந்தார்.

பின்னர் ஓமலூர் அருகே உள்ள பெரமச்சூர் கிராமத்தை சேர்ந்த கொத்தனார் தங்கவேல்(35) என்பவரை 2–வது திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ்ந்து வந்தார். அவருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தங்கமணி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பிரிந்து, தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். அவருடைய பெற்றோர் ஓமலூர் பஸ் நிலைய பகுதியில் காய்கறி மற்றும் பழ வியாபாரம் செய்து வருகின்றனர்.

கொடூரக்கொலை

நேற்று முன்தினம் இரவு தங்கமணி வீட்டில் தனியாக இருந்தார். இந்த நிலையில் இரவு 11 மணிக்கு மேல் வியாபாரத்தை முடித்துக்கொண்டு மாணிக்கம், காமாட்சி ஆகியோர் வீட்டுக்கு திரும்பி வந்தனர். அப்போது அவர்களுடைய மகள் தங்கமணியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள், மொட்டை மாடிக்கு சென்று பார்த்தனர். அங்கு கத்தியால் கழுத்து அறுக்கப்பட்டும், கை,கால் உள்பட உடலில் 20–க்கும் மேற்பட்ட இடங்களில் கத்தியால் கீறப்பட்டும் ரத்த வெள்ளத்தில் தங்கமணி பிணமாக கிடந்தார்.

அவரை மர்ம நபர் கொடூரமாக கொலை செய்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடைய பெற்றோர், உடனடியாக ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் அழகு, இன்ஸ்பெக்டர் ரஜினிகாந்த் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

மேலும் கொலை செய்யப்பட்ட தங்கமணியின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதனிடையே கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு கொலையாளி விட்டு சென்ற தடயங்களை பதிவு செய்தனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு வீட்டில் இருந்து சிறிதுதூரம் ஓடி நின்று விட்டது. நாய் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

விசாரணை தீவிரம்

இந்த கொலை குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக கள்ளக்காதல் தகராறு காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? வேறு காரணமா? என்று விசாரித்து வருகின்றனர். மேலும் கொலையாளியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்