ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் நேற்று கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-01-19 00:33 GMT
தர்மபுரி,

ஜல்லிகட்டுக்கு தடை

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளதை கண்டித்தும், பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும், ஜல்லிக்கட்டை நடத்த வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் உடனடியாக ஜல்லிக்கட்டை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஓசூர், பர்கூர்

ஓசூரில் பழைய நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் என்று ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஜல்லிக்கட்டை உடனடியாக தமிழகத்தில் நடத்த வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

பர்கூரில் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் 400-க்கும் மேற்பட்டோர் நேற்று வகுப்புகளை புறக்கணித்துவிட்டு ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பர்கூர் பஸ்நிலையத்தில் பொதுமக்கள், இளைஞர்கள் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தியபடி ஊர்வலமாக சென்றனர்.

உண்ணாவிரதம்

மத்தூர் பஸ்நிலையம் அருகே இளைஞர்கள் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டு ஜல்லிக்கட்டை ஆதரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நூர்பாஷா, ஆசிப்இக்பால், மசூத்அகமது, ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

சந்தூரில் பொதுமக்கள் ஜல்லிக்கட்டு ஆதரவு தெரிவித்து கடைகளை அடைத்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள், வியாபாரிகள், இளைஞர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். இதே போல் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம்

தர்மபுரி அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் நேற்று வகுப்புகளை புறக்கணித்த மாணவர்கள், கல்லூரி நுழைவாயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தர்மபுரி அரசு என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாணவிகளும் பங்கேற்றனர்.

தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள், ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர். இதேபோல் பல்வேறு இளைஞர் அமைப்புகள் சார்பில் தர்மபுரி இலக்கியம்பட்டி ஏரிக்கரை பகுதியில் நடந்த போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

தர்ணா

இந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க கோரியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தியும், கோஷங்கள் எழுப்பினார்கள். காலை முதல் இரவு வரை போராட்டம் தொடர்ந்ததால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டி பஸ்நிலையத்தில் திரண்ட இளைஞர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பியபடி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்