ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரக்கோரி மாணவ-மாணவிகள் போராட்டம்

ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரக்கோரி கரூரில், வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

Update: 2017-01-19 00:29 GMT
கரூர்,

மாணவர்கள் போராட்டம்

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதி வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள், பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில், ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் கொண்டு வரக்கோரி கரூர் மாவட்டத்தில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். அதன்படி கரூர் தாந்தோன்றிமலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி முன்பு சாலையோரம் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

கோரிக்கைகள்

இதேபோல கரூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரி, கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து விட்டு கல்லூரி முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். பின்னர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கல்லூரி மாணவ-மாணவிகளும் கரூர் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் காலை 11 மணி அளவில் குவிந்தனர். பின்னர் அவர்கள் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

வனவிலங்கு பட்டியலில் இருந்து காளையை நீக்க வேண்டும், அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த அனுமதிக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டி நடத்த போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவு செய்யாமல் அவர்களை விடுவிக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டம் மாலை வரை நீடித்தது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ-மாணவிகளிடம் கேட்டபோது எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

போலீஸ் பாதுகாப்பு

முன்னதாக மாணவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு கரூர் பஸ் நிலைய ரவுண்டானாவை வந்து பின்னர் போராட்டம் நடைபெற்ற மைதானத்தை வந்தடைந்தனர். மாணவர்களின் போராட்டத்தையொட்டி அசம்பாவித சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜசேகரன் உத்தரவின்பேரில், துணை சூப்பிரண்டு கும்மராஜா தலைமையில் திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போராட்டம் நடத்தியவர்களிடம் போலீசார் பல்வேறு கட்ட பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டத்தை கைவிட மாணவர்கள் மறுத்து விட்டனர்.

குளித்தலை

இதேபோல, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி குளித்தலையில் உள்ள அரசு கலைக்கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட தலைவர் மாணிக்கவேல் தலைமையில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். மாவட்ட தலைவர் துரைசாமி வரவேற்றார். மாவட்ட செயலாளர் சாந்த குமார் கோரிக்கையை விளக்கி பேசினார்.

மேலும் செய்திகள்