ஊட்டியில் நாள் ஒன்றுக்கு 38 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது கலெக்டர் சங்கர் தகவல்

ஊட்டியில் நாள் ஒன்றுக்கு 38 டன் குப்பைகள் சேகரிக்கப்படுவதாக கலெக்டர் சங்கர் தெரிவித்தார்.

Update: 2017-01-19 00:21 GMT
பிளாஸ்டிக் பொருட்கள்

நீலகிரி மாவட்டம் இயற்கை எழில் சூழ்ந்த மாவட்டமாக உள்ளது. இதனால் இங்கு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் சுற்றுலா பயணிகள் விட்டு செல்லும் பிளாஸ்டிக் பொருட்கள், குடிநீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் என நாள்தோறும் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் சேகரமாகிறது.

இந்த பிளாஸ்டிக் பொருட்களை அரைத்து துகள்களாக மாற்றும் எந்திரம் அமைக்கும் பணி ஊட்டி காந்தல் முக்கோணம் பகுதியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது. இதற்கான பணி முடிவடைந்ததும், இந்த எந்திரத்தின் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சங்கர் தலைமை தாங்கி பேசியதாவது:-

38 டன் குப்பைகள்

ஊட்டி நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. இதில் நாள்ஒன்றுக்கு மொத்தம் 38 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதில் 26 டன் மக்கும் குப்பையும், 11 டன் பிற குப்பைகளும், 1 டன் அளவிற்கு பிளாஸ்டிக் குப்பைகளும் கிடைக்கிறது. இதில் மக்கும் குப்பைகளில் இருந்து 5 டன் அளவிற்கு காய்கறி கழிவுகள் கிடைக்கிறது. இந்த காய்கறி கழிவுகளில் இருந்து பயோ கியாஸ் உற்பத்தி செய்து, அதன் மூலம் மின்சாரம் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ஊட்டி நகராட்சியில் சேகரமாகும் 1 டன் பிளாஸ்டிக் குப்பைகளை அரைத்து துகள்களாக மாற்ற ரூ.3 லட்சம் செலவில் எந்திரமும், ரூ.21 லட்சம் செலவில் கட்டமைப்புகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அரைக்கப்பட்ட பிளாஸ்டிக் துகள்களை பெற்றுக்கொள்ள ஐ.டி.சி. நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவர்கள் இந்த பிளாஸ்டிக்கை மறு சுழற்சிக்கு பயன்படுத்தி கொள்வார்கள்.

உரம் தயாரிப்பு

இதற்காக ஊட்டி நகராட்சியில் உள்ள 9-வது வார்டு முதல் 18-வது வார்டு வரை உள்ள பொதுமக்கள், வணிக நிறுவனங்கள், வியாபாரிகளிடம் மக்கும், மக்காத குப்பைகளை தனித்தனியாக பிரித்து தரும்படி ஆலோசனை வழங்கப்பட்டு உள்ளது. மேலும் நகராட்சி பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கப்படும். மக்கும் குப்பைகள் தீட்டுக்கல் பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உரம் தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கே.ஆர்.அர்ஜூணன் எம்.பி., ஊட்டி நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) டாக்டர் பிரபாகர், ஆர்.டி.ஓ. கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்