தடையை மீறி நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

திருமானூர், வேப்பந்தட்டை பகுதிகளில் தடையை மீறி நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை இளைஞர்கள் மல்லுக்கட்டி அடக்கினர்.;

Update: 2017-01-19 00:19 GMT
திருமானூர்,

தடையை மீறி ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகேயுள்ள கீழப்பழுவூரில் நேற்று பொதுமக்கள், கிராம நாட்டாண்மைகள் மற்றும் இளைஞர்கள் ஊர்வலம் நடத்தினர். அவர்கள் காளைகளை ஓட்டிக் கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக வந்தனர். அப்போது ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க கோரியும், பீட்டா அமைப்புக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

திடீரென்று அவர்கள் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினர். சரக்கு வாகனங்களை பயன்படுத்தி வாடிவாசல் அமைத்து காளைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து விட்டனர். 20-க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை அங்கு கூடியிருந்த இளைஞர்கள் மல்லுக்கட்டி அடக்கினர்.

அன்னமங்கலம் கிராமத்தில்...

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அன்னமங்கலம் கிராமத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்போவதாக இளைஞர்கள் ஏற்கனவே அறிவித்து இருந்தனர். இதனால் அந்த கிராமத்தில் நேற்று அரும்பாவூர் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். எனினும் அதனை இளைஞர்கள் கண்டுகொள்ளாமல் தடையை மீறி ஒரு சில தெருக்களில் ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்டனர். சீறிப்பாய்ந்த அந்த காளைகளை இளைஞர்கள் பிடித்து அடக்கினர். இதையடுத்து போலீசார் மாடுகளை அவிழ்த்து விட்ட நபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் காளைகளை அவிழ்த்து விட்டு விளையாட வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டனர்.

மேலும் செய்திகள்