4 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி வர்த்தக சங்கத்தினர் ரெயில் மறியலில் ஈடுபட முயற்சி

4 வழிச்சாலை அமைக் கும் திட்டத்தை கைவிடக்கோரி மந்தாரக்குப்பத்தில், ரெயில் மறியலில் ஈடுபட முயன்ற வர்த்தக சங்கத்தினர் 205 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-01-18 23:30 GMT
4 வழிச்சாலை

கடலூரில் இருந்து சின்னசேலம் வரை இருவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இதில் மந்தாரக்குப்பம் அடுத்த ரோமாபுரியில் இருந்து பெரியாக்குறிச்சி வரையிலான 5 கிலோ மீட்டர் தூரமுள்ள சாலையை 4 வழிச்சாலையாக அமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு அப்பகுதி வர்த்தக சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் 4 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு, இருவழிச்சாலை அமைக்கவேண்டும் எனக்கூறி, அப்பகுதி வர்த்தக சங்கத்தினர் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் விருத்தாசலம் தாசில்தார், கோட்டாட்சியர், மாவட்ட கலெக்டர், முதல்-அமைச்சர் மற்றும் மத்திய மந்திரி ஆகியோரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக அவர்கள் கடைகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம், கடையடைப்பு, மனித சங்கிலி உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அவசர ஆலோசனை கூட்டம்

இதற்கிடையே நெடுஞ்சாலைத்துறையினர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வருகிற 21-ந்தேதி(அதாவது நாளை மறுநாள்) மந்தாரக்குப்பத்தில் உள்ள அனைத்து கடைகளும் அகற்றப்படும் என்று அறிவித்தனர். இதுபற்றி அறிந்த அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள், வர்த்தக சங்கத்தினர் நேற்று முன்தினம் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டினர். அதில் நெய்வேலியில் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடபோவதாக முடிவெடுத்தனர்.

ரெயில் மறியல் முயற்சி

இது குறித்து தகவல் அறிந்த கடலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விருத்தாசலம் கார்த்திகேயன், நெய்வேலி வெங்கடேசன், கடலூர் மதுவிலக்கு பிரிவு குமார் மற்றும் போலீசார் நெய்வேலி ரெயில் நிலையம் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நேற்று காலை 9.10 மணியளவில் நாகப்பட்டினத்தில் இருந்து மைசூர் நோக்கி செல்லும் பயணிகள் ரெயிலை மறிப்பதற்காக அனைத்து கட்சி பிரமுகர்கள், வர்த்தக சங்கத்தினர் ரெயில் நிலையம் முன்பு திரண்டு வந்தனர்.

அவர்களை போலீசார் ரெயில் நிலையம் முன்பு தடுத்து நிறுத்தினர். இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட வந்தவர்கள் அங்கேயே அமர்ந்து மந்தாரக்குப்பத்தில், 4 வழிச்சாலை அமைக்கக்கூடாது என்று கூறி கோஷம் எழுப்பினர். இதுபற்றி அறிந்த விருத்தாசலம் தாசில்தார் பன்னீர்செல்வம், அனைத்து கட்சியினர் மற்றும் வர்த்தகர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

முத்தரப்பு பேச்சுவார்த்தை

அப்போது ரோமாபுரியில் இருந்து பெரியாக்குறிச்சி வரை 4 வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டு, இருவழிச்சாலை அமைக்க வேண்டும், இதுதொடர்பாக, மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலைத்துறையினர், வர்த்தகர் சங்கத்தினர், போலீசாருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

இதற்கு தாசில்தார் பன்னீர்செல்வம் பதில் அளித்து கூறுகையில், இப்பிரச்சினை குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். அதுவரை நெடுஞ்சாலைத்துறையினர் கடைகளை இடிக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.

205 பேர் கைது

இதையடுத்து ரெயில் மறியலில் ஈடுபட முயன்றதாக அனைத்து கட்சி பிரமுகர்கள் மற்றும் வர்த்தக சங்கத்தினர் 205 பேரை போலீசார் கைது செய்து மந்தாரக்குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையனும் அந்த மண்டபத்திற்கு வந்தார்.

மேலும் செய்திகள்