மாணவர்கள் போராட்டத்தில் போலீஸ் கமிஷனரை நோக்கி தண்ணீர் பாக்கெட்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு

சேலத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடந்து வரும் மாணவர்களின் போராட்டத்தின் போது போலீஸ் கமிஷனரை நோக்கி தண்ணீர் பாக்கெட்டுகள் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-01-18 23:27 GMT
சேலம்,

இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சேலத்தில் கல்லூரி மாணவர்கள் உள்பட பலர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 300-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சேலம் பனங்காடு பகுதியில் இருந்து ஊர்வலமாக கந்தம்பட்டி பைபாஸ் சாலையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு வரை வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதையடுத்து அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதைத்தொடர்ந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த 70-க்கும் மேற்பட்டவர்கள் அதே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனிடையே, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி வரும் மாணவர்கள் பிரதமர் மோடியின் உருவப்பொம்மை மற்றும் பீட்டா என்று எழுதப்பட்ட வாசகங்களை மீண்டும் எரித்தனர்.

தண்ணீர் பாக்கெட்டுகள் வீச்சு

இரவு 7.30 மணிக்கு சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் போராட்டம் நடக்கும் இடத்திற்கு வந்து பார்வையிட்டார். பின்னர் அவர் போராட்டத்தின் தற்போதைய நிலை குறித்து போலீஸ் துணை கமிஷனர் ஜோர்ஜ் ஜார்ஜிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த தயாரானார்.

அப்போது கூட்டத்தில் இருந்து மாணவர்கள் சிலர் தண்ணீர் பாக்கெட்டுகளை போலீஸ் கமிஷனரை நோக்கி வீசினர். இதில் தண்ணீர் பாக்கெட் ஒன்று போலீஸ் கமிஷனர் அருகே விழுந்தது. இதையடுத்து அவர் வேகமாக காரில் ஏறினார். அப்போது அவருடைய கார் மீது தண்ணீர் பாக்கெட்டுகள் விழுந்து உடைந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போராட்டம் தொடர்கிறது

இந்த போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் இரவு சாப்பாடு இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் கடும் குளிரை பொருட்படுத்தாமல் குழந்தைகளுடன் பெண்கள் உள்பட பலர் சாலையில் ஆங்காங்கே படுத்து தூங்கினர். நள்ளிரவை தாண்டியும் மாணவர்களின் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்