சேலத்தில் 6 ஆயிரம் மாணவர்கள் போராட்டம்; சாலை மறியல்

சாலைமறியலில் ஈடுபட்டதால் மாநகரமே ஸ்தம்பித்தது. மேலும் கலெக்டர் அலுவலகம் முன்பு 2 மாணவர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-01-18 23:16 GMT
சேலம்,

ஜல்லிக்கட்டு போராட்டம்

தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின்போது ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை. இந்தாண்டு எப்படியும் ஜல்லிக்கட்டு நடைபெறும் என்று தமிழக மக்களும், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அதற்கான அனுமதி கிடைக்கவில்லை.

இதனால் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டி தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் குறிப்பாக கல்லூரி மாணவ-மாணவிகளும் தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்ட களத்தில் குதித்துள்ளனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தில் சேலம், ஆத்தூர், தம்மம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஆர்ப்பாட்டம், சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

சேலத்தில் திரண்ட மாணவர்கள்

சேலத்தில் நேற்று காலை 8 மணியளவில் கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு மற்றும் தனியார் கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து திரண்டனர். மேலும், சட்டக்கல்லூரி மாணவர்களும், சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகளும் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர். அப்போது மாணவர்கள் 30 அடி நீளமுள்ள தேசிய கொடியை ஏந்தி இருந்தனர். பின்னர், அவர்கள் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும், ஜல்லிக்கட்டை எதிர்க்கும் பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் கோஷங்களை எழுப்பினர். சில மாணவ-மாணவிகள் தரையில் அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

இது ஒருபுறம் இருக்க, சேலம் 5 ரோடு பகுதியில் இருந்து கல்லூரி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஊர்வலமாக கலெக்டர் அலுவலகம் நோக்கி புறப்பட்டு வந்தனர். பின்னர், அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுடன் இணைந்து ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆரம்பத்தில் 500 பேருடன் தொடங்கிய இந்த போராட்டம் நேரம் செல்ல செல்ல 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டதால் கலெக்டர் அலுவலகம் பகுதியே ஸ்தம்பித்தது.

சாலை மறியல்

ஒரு கட்டத்தில் மாணவர்களின் கூட்டம் அதிகமாகி கொண்டிருந்ததால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரால் அவர்களை கட்டுப்படுத்தமுடியவில்லை. கலெக்டர் அலுவலகம் முன்பு கட்டுக்கடங்காத அளவில் மாணவர்களின் கூட்டம் சாலையில் காணப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களின் ஒரு பகுதியினர் திடீரென பெரியார் மேம்பாலத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும், கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள ரவுண்டானா முன்பு கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாணவர்கள் திடீரென சாலையில் படுத்துக்கொண்டு மறியலில் ஈடுபட்டனர். அப்போது மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

2 பேர் தீக்குளிக்க முயற்சி

போராட்டத்தில் ஈடுபட்ட தனியார் கல்லூரி மாணவர்கள் பூபாலன் (வயது 20), ராஜ்குமார் (20) ஆகிய இருவரும் திடீரென உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. இதை அறிந்த போலீசார் உடனடியாக அங்கு சென்று அவர்களது கையில் வைத்திருந்த கேன்களை பிடுங்கி அப்புறப்படுத்தினர். மேலும், சக மாணவர்கள் அவர்களது உடலில் தண்ணீரை ஊற்றி அங்கிருந்து அழைத்து சென்றனர்.

தீக்குளிக்க முயன்ற மாணவர்கள் கூறும்போது, ஜல்லிக்கட்டு என்பது நமது கலாசாரம், பாரம்பரிய வீர விளையாட்டு. அதை தடை செய்ய யாருக்கும் உரிமை கிடையாது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் தற்போது போராட்டத்தில் குதித்துள்ளனர். எனவே, தமிழர்களின் உணர்வுகளை புரிந்துக்கொண்டு ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் இயற்ற வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் இந்த போராட்டம் மேலும் வெடிக்கும், என்றனர்.

கலெக்டர் அலுவலகம் முற்றுகை

சேலம் பழைய நாட்டாண்மை கட்டிடம் முதல் கலெக்டர் அலுவலகம் வரையிலும், பெரியார் மேம்பாலம் முழுவதிலும் மாணவர்கள் திரண்டு நின்று ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதை காணமுடிந்தது. இதுதவிர, மாணவர்களில் ஒரு பிரிவினர் திடீரென கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளே நுழைய முயன்றனர். பிறகு அங்கிருந்த போலீசார் கலெக்டர் அலுவலக நுழைவாயில் கதவை இழுத்து மூடினர். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் போராட்டத்தால் கலெக்டர் அலுவலகம் பகுதி பரபரப்பாக காட்சியளித்தது. மாநகர துணை கமிஷனர்கள் ஜோர்ஜி ஜார்ஜ், ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தது. அதாவது காலை 8 மணிக்கு ஆரம்பித்த மாணவர்களின் போராட்டமானது, இரவு வரையிலும் நீடித்தது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் திரண்டு போராட்டம் நடத்தியது சேலத்தை ஸ்தம்பிக்க வைத்தது.

அ.தி.மு.க.பேனர் கிழிப்பு

சேலம் பழைய நாட்டாண்மை கட்டிடம் முன்பு மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் விளம்பர பேனர் ஒன்றை வைத்திருந்தனர். ஆனால் நேற்று நடந்த மாணவர்கள் போராட்டத்தின்போது, அந்த பேனரை சிலர் கிழித்தனர். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து அந்த பேனரை கிழித்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்