அலங்காநல்லூரில் 3–வது நாளாக தொடரும் போராட்டம்: தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும் போராட்டக்காரர்கள் திடீர் கோரிக்கை

ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Update: 2017-01-18 23:16 GMT

மதுரை,

ஜல்லிக்கட்டுக்கு விதித்த தடையை நீக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அலங்காநல்லூர் போராட்டக்காரர்கள் திடீர் கோரிக்கை வைத்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு

சுப்ரீம் கோர்ட்டு தடை காரணமாக இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறாததால் தமிழக முழுவதும் மாணவ, மாணவிகள், இளைஞர்கள் ஆவேசம் அடைந்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கு பிரசித்தி பெற்ற அலங்காநல்லூரில் கடந்த 16–ந் தேதி தொடங்கிய இந்த போராட்டம் நேற்று 3–வது நாளாக நீடித்தது.

உள்ளூர் மக்கள், வெளியூர் இளைஞர்கள், மாணவர்கள் என பலதரப்பினரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள். போராட்டம் தொடங்கிய மறுநாள் கைதான பிறகும் இளைஞர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. எனவே போலீசார் அவர்களை விடுவித்தனர். அதன்பிறகும் அவர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

அலங்காநல்லூர் கேட்டுக்கடை பகுதியில் போராட்டக்காரர்கள் பெருமளவில் குவிந்து மறியலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஜல்லிக்கட்டு நடத்தும் வரை போராட்டம் ஓயாது என்று அவர்கள் அறிவித்துள்ளனர்.

கிராம மக்கள் ஆதரவு

இந்நிலையில், பக்கத்து கிராமங்களை சேர்ந்த பொதுமக்களும் நேற்று போராட்ட களத்தில் குதித்தனர். மாணவர் அமைப்பினர், விவசாயிகள் சங்கத்தினர், தமிழ் அமைப்பினர் என பல்வேறு அமைப்பினரும் தங்களது ஆதரவை முன்வைத்தனர். போராட்டம் நடத்திய கிராம மக்களுக்கு வேண்டிய பாதுகாப்பை போலீசார் வழங்கினர். நேற்று அதிகாலையில் இருந்து பக்கத்து கிராமங்களை சேர்ந்த மக்கள் வந்தவண்ணம் இருந்தனர்.

குறிப்பாக அலங்காநல்லூர் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பெண்கள் தங்களது முழுமையான ஆதரவை போராட்டக்காரர்களுக்கு அளித்தனர்.

போராட்டத்தின்போது மதிய வேளையில் நடிகர் இமான் அண்ணாச்சி அலங்காநல்லூர் வந்தார். அவர் ஊருக்கு வெளியிலேயே நின்று பேசி தனது ஆதரவை தெரிவித்து பேசிச்சென்றார்.

பஸ்கள் ஓடவில்லை

போராட்டம் காரணமாக நேற்று 6–வது நாளாக அலங்காநல்லூர், பாலமேடு போன்ற பகுதிகளுக்கும், அதனை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் பஸ் போக்குவரத்து நடைபெறவில்லை.

அலங்காநல்லூரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள். பொங்கல் பண்டிகைக்காக வெளியூர்களில் இருந்து வந்தவர்கள், தங்களது சொந்த கிராமங்களுக்கு செல்லமுடியாமல் அவதியடைந்தனர். மேலும் அவர்கள் அலங்காநல்லூரில் இருந்து சுமார் 15 கி.மீ. நடந்து சத்திரப்பட்டி, ஊமச்சிகுளம் சென்று அங்கிருந்து பஸ் பிடித்துச் சென்றனர்.

திடீர் கோரிக்கை

இதற்கிடையே, ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்று மாலை திடீரென ஒரு கோரிக்கையை முன்வைத்தனர்.

அதாவது, “தமிழர்களுக்காகவும், தமிழ் உணர்வுகளுக்காகவும் விரைந்து நடவடிக்கை எடுத்து, இன்று (அதாவது நேற்று) மாலை 6 மணிக்குள் ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ய வேண்டும்“ என்று கோரிக்கை விடுத்துள்ளனர். அவ்வாறு ராஜினாமா செய்தால், தங்கள் போராட்டங்களை நிறுத்திக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் அலங்காநல்லூருக்கு பிற்பகலில் டைரக்டர் கவுதமன் வந்தார். அவர் போராட்டக்காரர்கள் மத்தியில் உரையாற்றினார்.

மேலும் செய்திகள்