வாழை தோட்டத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் 1,000 மரங்களை நாசம் செய்தன

குடியாத்தம் அருகே வாழை தோட்டத்திற்குள் புகுந்த யானைகள் 1,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மிதித்து நாசப்படுத்தின.;

Update: 2017-01-18 23:11 GMT
குடியாத்தம்,

யானைகள் அட்டகாசம்

குடியாத்தத்தில் இருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில் ஆந்திர மாநில வனப்பகுதியில் கவுண்டன்ய யானைகள் சரணாலயம் உள்ளது. இந்த ஆண்டு மழை பொய்த்துவிட்டதால் வனப்பகுதியில் உள்ள குட்டை, ஊற்றுகள் வறண்டுவிட்டன. யானைகளுக்கு போதிய உணவும் அந்த பகுதியில் கிடைக்காததால் அவை தமிழகத்துக்குள் படையெடுத்துள்ளன. தமிழக பகுதியிலும் நிலைமை இதைவிட மோசமாக உள்ளது.

இதனால் இங்கு படையெடுத்த யானைகள் மோர்தானா அணை பகுதியிலும், சைனகுண்டா, தனகொண்டபள்ளி, கொட்டமிட்டா, கொட்டாரமடுகு கிராமங்களுக்குள் புகுந்த விளைநிலங்களுக்குள் சென்று பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

1,000 வாழை மரங்கள் நாசம்

இந்த நிலையில் 4 பெரிய யானைகள் மற்றும் 2 குட்டி யானைகள் நேற்று அதிகாலையில் சைனகுண்டா - பண்டலதொட்டி செல்லும் சாலையில் கொண்டம்மா கோவில் அருகில் வனப்பகுதியை யொட்டியபடி உள்ள ரகுபதி மற்றும் அவரது தம்பி தாமோதரன் ஆகியோருக்கு சொந்தமான வாழை தோப்புக்குள் புகுந்த யானைகள் 1,000-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை மிதித்து நாசம் செய்தன.

மேலும் அருகில் உள்ள தீனன் என்பவருடைய நிலத்திற்குள் புகுந்த யானைகள் அங்கிருந்த மா மரங்களின் கிளைகளை உடைத்து நாசப்படுத்தின.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் வனச்சரக அலுவலர் குமார் தலைமையில் வனக்காப்பாளர்கள் வடிவேல், வனக்காவலர்கள் சிவன், சந்திரன் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பொதுமக்களுடன் இணைந்து பட்டாசுகளை வெடித்தும் தீப்பந்தங்களை காட்டியும் யானைகளை விரட்டினர்.

மேலும் செய்திகள்