கத்தியால் குத்தி பள்ளி மாணவன் கொலை உடலை சூலாயுதத்தில் தொங்க விட்ட கொடூரம்

கபிஸ்தலம் அருகே பள்ளி மாணவனை கத்தியால் குத்திக்கொலை செய்து, அவனுடைய உடலை சூலாயுதத்தில் தொங்க விட்டதாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.;

Update:2017-01-19 03:59 IST
கபிஸ்தலம்,

மாணவன் கொலை

தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே வீராஞ்சேரி வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகானந்தம். விவசாய தொழிலாளி. இவருடைய மகன் அருள்குமார் (வயது14). இவர் அருகே உள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய தாயார் சங்கீதா. நேற்றுமுன்தினம் இரவு அதே பகுதியில் உள்ள கருப்பசாமி கோவிலின் முன்புறம் இருந்த சூலாயுதத்தில் அருள்குமாரின் உடல் தலை கீழாக தொங்க விடப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக கபிஸ்தலம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ், கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதில் மாணவர் அருள்குமார் கொலை செய்யப்பட்டு, அவருடைய உடல் சூலாயுதத்தில் தொங்கவிடப்பட்டது தெரியவந்தது.

2 பேர் கைது

இதைத்தொடர்ந்து போலீசார், அருள்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அருள்குமார், அந்த பகுதியை சேர்ந்த காதல் ஜோடிக்கு உதவியதும், இதனால் ஆத்திரம் அடைந்த சம்பந்தப்பட்ட பெண்ணின் தாய்மாமன் சரவணன் (33), அண்ணன் பொன்னுசாமி (23) ஆகியோர் அருள்குமாரை கத்தியால் குத்திக்கொலை செய்து, கோவில் முன்பு இருந்த சூலாயுதத்தில் உடலை தொங்க விட்டதும் தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணன், பொன்னுசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்து, பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பள்ளி மாணவன் ஒருவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் கபிஸ்தலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி மக்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மேலும் செய்திகள்