தூத்துக்குடியில் 403 மாணவிகளுக்கு இலவச சைக்கிள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்

தூத்துக்குடியில் 403 மாணவிகளுக்கு இலவச சைக்கிளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

Update: 2017-01-18 22:16 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் 403 மாணவிகளுக்கு இலவச சைக்கிளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

இலவச சைக்கிள்

தூத்துக்குடி சுப்பையா வித்யாலயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் மாணவ–மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் ரவிகுமார் தலைமை தாங்கினார். ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி. முன்னிலை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராமகிருஷ்ணன் வரவேற்று பேசினார். சிறப்பு அழைப்பாளராக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு 403 மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கி பேசினார்.

முதன்மை மாநிலம்

அப்போது, மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா தமிழக மக்களுக்காக அனைத்து நலத்திட்டங்களையும் தந்து நாட்டில் முதன்மை மாநிலமாக தமிழகத்தை மாற்றி காட்டி இருக்கிறார். மாணவ–மாணவிகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தினார்.

தமிழ்நாட்டில் உள்ள மாணவ, மாணவிகளின் கல்வி அறிவை உலக தரத்தில் மேம்படுத்தும் நோக்கத்தில் கல்விக்காக அதிக நிதி ஒதுக்கீடு செய்து அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் தமிழக அரசால் அனைத்து விலையில்லா பொருட்களும் வழங்கப்படும், என்று கூறினார்.

18 ஆயிரம் சைக்கிள்கள்

விழாவில் மாவட்ட கலெக்டர் ரவிகுமார் பேசும் போது, ‘மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் 78 ஆயிரத்து 705 மாணவ–மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டு உள்ளது. 2016–17–ம் கல்வியாண்டில் மாவட்டத்தில் உள்ள 53 அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடங்கள் மற்றும் 83 அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்கள் ஆக மொத்தம் 136 பள்ளிக்கூடங்களில் பிளஸ்–1 படிக்கும் 18 ஆயிரத்து 604 மாணவ–மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட உள்ளது. எந்த திட்டத்தை தமிழக அரசு அறிவித்தாலும் அவற்றை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் முதலிடத்தில் உள்ளது, என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் ராஜகோபால், தூத்துக்குடி வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தலைவர் மாணிக்கராஜா, பள்ளிக்கூட தலைமையாசிரியை சாந்தினி கவுசல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்