தங்கையிடம் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் நண்பனை கொலை செய்த வியாபாரிக்கு ஆயுள் தண்டனை
தங்கையிடம் கள்ளத்தொடர்பு வைத்து இருந்ததால் நண்பனை கொலை செய்த வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட செசன்சு கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.;
தேனி,
தங்கையிடம் கள்ளத்தொடர்பு வைத்து இருந்ததால் நண்பனை கொலை செய்த வியாபாரிக்கு ஆயுள் தண்டனை விதித்து தேனி மாவட்ட செசன்சு கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
வாலிபர் கொலைதேனி அருகே பூதிப்புரத்தில் கொட்டக்குடி ஆற்றங்கரையோரம் கடந்த 8–7–2011 அன்று, கொலை செய்யப்பட்ட நிலையில் ஆண் பிணம் கிடந்தது. பிணமாக கிடந்தவரின் தலையில் பலத்த காயங்கள் இருந்தன. பிணத்தை கைப்பற்றி, பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இறந்த நபர் தேனி மாவட்டம், பெரியகுளம் அழகர்சாமிபுரத்தை சேர்ந்த தம்மன் மகன் தம்புராஜ் (வயது 28) என்பதும், அவர் டிரைவராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இந்த கொலை வழக்கு தொடர்பாக போலீசார் துப்பு துலங்கினர். இதில், தம்புராஜை அவருடைய நண்பரான சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள மேலப்பெருந்துறையை சேர்ந்த வேதமாணிக்கம் மகன் கணேசன் (34) கொலை செய்தது தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வந்தனர். கணேசன், பாசிமணிகளை இலங்கை, அந்தமான் பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் வியாபாரியாக இருந்தார். அவரை சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு 2014–ம் ஆண்டு போலீசார் கைது செய்தனர்.
ஆயுள் தண்டனைகைது செய்யப்பட்ட கணேசனிடம் விசாரணை நடத்திய போது அவர் போலீசாரிடம், ‘எனது தங்கையுடன் தம்புராஜ் கள்ளத்தொடர்பு வைத்து இருப்பதாக எனது பெற்றோர் கூறினர். நானும் இதனை நேரில் பார்த்தேன். சம்பவத்தன்று, தம்புராஜை பூதிப்புரம் கொட்டக்குடி ஆற்றுக்கு அழைத்துச் சென்றேன். மதுபோதையில் இருந்த அவரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தேன்’ என்று வாக்குமூலம் அளித்து இருந்தார்.
இந்த வழக்கு தேனி மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. அரசு தரப்பில் வக்கீல் டி.கே.ஆர்.கணேசன் ஆஜரானார். இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து செசன்சு நீதிபதி எம்.எம்.கிருஷ்ணன் நேற்று தீர்ப்பு கூறினார். தம்புராஜை கொலை செய்த கணேசனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார். இதையடுத்து கணேசனை போலீசார் பாதுகாப்பாக அழைத்துச் சென்று மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.