வாலிபர் கொலை வழக்கு: தலைமறைவான 5 பேரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டம்

வாலிபர் கொலை வழக்கில், தலைமறைவான 5 பேரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் ரே‌ஷன் கடையில் பொருட்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-01-18 21:26 GMT

கண்டமனூர்,

வாலிபர் கொலை வழக்கில், தலைமறைவான 5 பேரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் ரே‌ஷன் கடையில் பொருட்கள் வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வாலிபர் கொலை

ஆண்டிப்பட்டி அருகே உள்ள தெப்பம்பட்டியை சேர்ந்தவர் மனோகரன். இவருடைய மகன் நாகபிரபு (வயது 23). கடந்த 15–ந்தேதி அப்பகுதியில் மாட்டுப்பொங்கல் கொண்டாட்டம் நடந்தது. அப்போது இரு தரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் நாகபிரபு அடித்துக்கொல்லப்பட்டார். இது தொடர்பான புகாரின் பேரில் ராஜதானி போலீசார் வழக்குப்பதிவு செய்து, அதே பகுதியை சேர்ந்த கண்ணன், பாண்டி உள்பட 6 பேரை கைது செய்தனர்.

மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சக்திகணேசன், பிச்சை உள்பட 5 பேர் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று தெப்பம்பட்டி பகுதியில் உள்ள ரே‌ஷன் கடையில் மண்எண்ணெய் மற்றும் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது.

போராட்டம்

அப்போது நாகபிரபுவின் உறவினர்கள் அங்கு வந்தனர். பின்னர் கடை முன்பு திரண்ட அவர்கள், கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள 5 பேரை கைது செய்யும் வரை நாங்கள் மண்எண்ணெய், பொருட்களை வாங்க மாட்டோம் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அப்பகுதி பொதுமக்களும் வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த ராஜதானி போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரிடமும் நாகபிரபுவின் உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது கொலை வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்தனர். இதையடுத்து நாகபிரபுவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பொதுமக்கள் போராட்டம் காரணமாக ரே‌ஷன் கடையிலும் குறைந்த எண்ணிக்கையிலான ரே‌ஷன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே நேற்று பொருட்கள் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்