ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கக்கோரி கல்லூரி மாணவர்கள் தொடர் தர்ணா

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி புதுவையில் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

Update: 2017-01-17 22:45 GMT

புதுச்சேரி,

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி புதுவையில் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர்.

நள்ளிரவிலும் தர்ணா

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க கோரி கல்லூரி மாணவர்கள் புதுச்சேரி கடலூர் சாலையில் உள்ள ரோடியர் மில் திடலில் நேற்று மாலை ஒன்று கூடினர். அங்கு அவர்கள் தொடர் தர்ணா போராட்டத்தினை தொடங்கினர். இந்த போராட்டத்தில் 500–க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின் போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்து போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி, இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கரன், ஜிந்தா கோதண்டராமன், தனசெல்வம், ஜெய்சங்கர் மற்றும் போலீசார் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து நள்ளிரவு வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கடற்கரை சாலை

இதேபோல் கடற்கரை காந்திதிடல் அருகில் நேற்று மாலை மேலும் சில கல்லூரிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடினர். அங்கு அவர்கள் திடீரென்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மத்திய அரசுக்கு எதிராகவும், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரியும் கோ‌ஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்