ஓய்வுபெற்ற டி.ஜி.பி. திலகவதி மகன் வீட்டில் 25 பவுன் நகை கொள்ளை

சேலத்தில், ஓய்வுபெற்ற டி.ஜி.பி. திலகவதி மகன் வீட்டு கதவின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் 25 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.;

Update: 2017-01-17 23:00 GMT
சேலம்,

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

ஓய்வு பெற்ற டி.ஜி.பி.


தமிழக டி.ஜி.பி.யாக இருந்து ஓய்வு பெற்றவர் திலகவதி. இவர் சென்னையில் வசித்து வருகிறார். இவரது மகன் டாக்டர் பிரபுதிலக். இவர் சமீபத்தில் சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் பணியாற்றி வந்தார். தற்போது டாக்டர் பிரபுதிலக் சென்னையில் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீடு, சேலம் அழகாபுரம் என்.டி.எஸ். நகரில் உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு டாக்டர் பிரபுதிலக், சேலத்தில் உள்ள வீட்டிற்கு வந்து குடும்பத்துடன் தங்கினார். பொங்கல் திருநாளையொட்டி விடுமுறை என்பதால், டாக்டர் பிரபுதிலக் தனது குடும்பத்தினருடன் மீண்டும் சென்னை சென்று விட்டார். வீட்டை வேலைக்கார பெண் ஒருவர் பராமரித்து வந்தார். இவரும் 2 நாட்களாக பொங்கல் விடுமுறை என்பதால் வீட்டு பக்கம் வரவில்லை. இந்த நிலையில் நேற்று காலை வேலைக்கார பெண், பிரபுதிலக்கின் வீட்டிற்கு வந்தார்.

நகை, வெள்ளிப்பொருட்கள் கொள்ளை


அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்த நிலையில் கிடந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வேலைக்காரப்பெண், உடனடியாக சேலம் அழகாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அழகாபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் கொள்ளை நடந்த வீட்டிற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு வீட்டில் உள்ள பீரோ திறந்த நிலையில் கிடந்தது. மேலும் சென்னையில் வசிக்கும் டாக்டர் பிரபுதிலக்கிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வீட்டில் உள்ள பொருட்கள் குறித்தும் அவரிடம் போலீசார் கேட்டறிந்தனர்.

அதன்படி, அவரது வீட்டில் 25 பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்கள் திருட்டுபோனது தெரியவந்தது. 2 நாட்களாக வீடு பூட்டிய நிலையில் கிடந்ததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், பூட்டை உடைத்து தங்கநகை, வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

ஓய்வு பெற்ற டி.ஜி.பி. திலகவதியின் மகன் டாக்டர் பிரபுதிலக் வீட்டில் கொள்ளை நடந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்