கூட்டுறவு வங்கியில் நகை மோசடி சம்பவம் வங்கி செயலாளரை கைது செய்ய இடைக்கால தடை

கடலாடி அருகே கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மோசடி சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான வங்கி செயலாளரை கைது செய்ய மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது. நகை மோசடி கடலாடி அருகே உள்ள ஏ.புனவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக்கட

Update: 2017-01-17 22:00 GMT

ராமநாதபுரம்,

கடலாடி அருகே கூட்டுறவு வங்கியில் ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மோசடி சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான வங்கி செயலாளரை கைது செய்ய மதுரை ஐகோர்ட்டு இடைக்கால தடை விதித்துள்ளது.

நகை மோசடி

கடலாடி அருகே உள்ள ஏ.புனவாசல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகைக்கடன் வழங்கும் பிரிவில் நகை மற்றும் பெறப்பட்ட கடன் தொகை பற்றிய விவரங்கள் தெரியவில்லை என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பலர் புகார் செய்தனர். அதைத்தொடர்ந்து கலெக்டர் நடராஜன் சம்பந்தப்பட்ட வங்கியில் ஆய்வு மேற்கொள்ள கூட்டுறவு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அதன்படி பரமக்குடி கூட்டுறவு துணை பதிவாளர் ஜெயசிங் தலைமையிலான அதிகாரிகள் கூட்டுறவு வங்கியில் நடத்திய சோதனையில் பலகோடி ரூபாய்க்கு மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. மேலும் வங்கியில் சுமார் 144 பேரின் 6 கிலோ 198.05 கிராம் தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.

இதுதொடர்பாக வங்கி செயலாளர் நாராயணன் அவரின் தம்பியான வங்கி கிளார்க் தங்கபாண்டி (வயது 44), ஏ.புனவாசலை சேர்ந்த லிங்கம் மகன் முன்னாள் தலைவர் ஆண்டி(50), தற்போதைய வங்கி தலைவர் ஏ.புனவாசல் ராமுத்தேவர் மகன் காளிமுத்து(62) ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தங்கபாண்டி, ஆண்டி, காளிமுத்து ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

கைது செய்ய தடை

இந்த மோசடியில் முக்கிய பங்கு வகித்த வங்கி செயலாளர் சித்திரங்குடியை சேர்ந்த செல்லச்சாமி மகன் நாராயணனை போலீசார் தேடிவந்தனர். அவர் இலங்கைக்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல் வெளியானது. இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் கூறியதாவது:– வங்கி செயலாளர் நாராயணன் இலங்கைக்கு தப்பி சென்றுவிட்டதாக தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து அவரின் பாஸ்போர்ட்டு தகவலின் அடிப்படையில் விமான நிலையங்களில் விசாரணை செய்தபோது அவர் எந்த நாட்டிற்கும் தப்பி செல்லவில்லை என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் மேற்படி வங்கி செயலாளர் நாராயணன் இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி வருகிற 21–ந்தேதி வரை நாராயணனை கைது செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். எனவே அவரை கைது செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனினும் சட்ட நடைமுறைகளை பின்பற்றி தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். வங்கி செயலாளர் நாராயணன் பிடிபட்டால்தான் மோசடி செய்யப்பட்ட நகைகளை கைப்பற்ற முடியும் என்பதால் அதற்கான சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

மேலும் செய்திகள்