ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் தொல்.திருமாவளவன் பேட்டி

ஜல்லக்கட்டுக்கு தடைக்கோரும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று சிவகங்கையில் பேட்டியளித்த தொல்.திருமாவளவன் கூறினார். பேட்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிவகங்கையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூ

Update: 2017-01-17 22:00 GMT

சிவகங்கை,

ஜல்லக்கட்டுக்கு தடைக்கோரும் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்று சிவகங்கையில் பேட்டியளித்த தொல்.திருமாவளவன் கூறினார்.

பேட்டி

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிவகங்கையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் உள்ள கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முதல்–அமைச்சர் பன்னீர்செல்வத்திடம் கோரிக்கை வைத்தோம். ஆனால் தமிழக அரசு இதுகுறித்த எந்த அறிவிப்பும் தரவில்லை. இது ஏமாற்றமளிக்கிறது. காந்தி மற்றும் அண்ணா நூற்றாண்டையொட்டி நன்னடத்தையுள்ள ஆயிரக்கணகான கைதிகள் விடுவிக்கப்பட்டனர். இது காலம்காலமாக பேசப்படுகிறது. அந்த வகையில் இப்போதாவது எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 10 ஆண்டிற்கு மேல் சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க வேண்டும்.

வார்தா புயலால் சென்னை, காஞ்சீபுரம் உள்ளிட்ட 9 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை அவர்களுக்கு நிவாரணம் வழங்கப்டாமல் உள்ளது. மத்திய அரசு மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. தமிழகத்திற்கு முதல் கட்டமாக ரூ.1,000 கோடி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்–அமைச்சர் கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு இதுவரை வழங்கவில்லை. இதற்காக மத்திய அரசை வன்மையாக கண்டிக்கிறோம். எனவே வார்தா புயல் மற்றும் வறட்சியால் பாதிக்கபட்டதற்கு உரிய நிவாரணம் அளிக்க முன்வரவேண்டும்.

ஜல்லிக்கட்டு

தமிழகத்தில் பாரம்பரியமாக நடைபெறும் ஜல்லிக்கட்டு என்ற ஏறு தழுவுதல் விழாவை கடந்த 2014–ம் ஆண்டு முதல் தடை செய்து விட்டனர். இதை விரைந்து விசாரித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு சென்றபோது அதை கோர்ட்டு தட்டி கழித்துவிட்டது. மேலும் மத்திய அரசு இதில் தலையிட்டு அவசர சட்டம் கொண்டுவர வேண்டும் என்று கோரிய போதும், மத்திய அரசு வழக்கம்போல் நம்மை ஏமாற்றிவிட்டது. தற்போது ஜல்லிக்கட்டு சில இடங்களில் நடத்தியுள்ளனர். அதை போலீசார் தடுத்து நெருக்கடி கொடுத்துள்ளனர். அவனியாபுரம், அலங்கநல்லூர், சேலம் போன்ற ஊர்களில் தடியடி நடத்தியுள்ளனர். ஜல்லிக்கட்டுக்கு எதிரான நடவடிக்கையை தமிழக அரசு எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு இதனை சட்டம்–ஒழுங்கு பிரச்சினையாக பார்க்காமல் தமிழகத்தின் பாரம்பரியமான கலாசார விழாவாக பார்க்க வேண்டும்.

மத்திய அரசை சார்ந்தவர்கள் ஜல்லிக்கட்டு நடத்தினால் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வருவோம் என்று பேசியது அதிர்ச்சி அளிக்கிறது. அந்த அளவுக்கு தமிழக அரசை பலவீனமாக கருதுகிறது. தமிழக அரசு இடையூறு இன்றி 4 ஆண்டும் பதவியில் நீடிக்க வேண்டும்.

பீட்டாவுக்கு தடை வேண்டும்

ஆந்திராவில் ஜல்லிக்கட்டு நடைபெற்றுள்ளது. அதே நேரத்தில் தமிழகத்தின் நிலையை பார்க்கும்போது தமிழக அரசு ஏதோ ஒரு காரணத்திற்காக மத்திய அரசுக்கு அச்சப்படுகிறது. இந்த விழாவை தமிழக அரசே முன்நின்று நடத்தி இருக்க வேண்டும். நீதிமன்ற அவமதிப்பு வந்தாலும் அதை சந்தித்திருக்க வேண்டும். பா.ஜ.க.வில் ஆளுக்கு ஒரு கருத்தை சொல்வார்கள். மந்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நினைத்தால் பிரதமரின் மனதை மாற்றியிருக்கலாம். ஆனால் அவரால் முடியவில்லை என்பது வருத்தமே. மேலும் பீட்டா அமைப்பு சர்வதேச பின்னணியில்செயல்படும் அமைப்பு. விலங்குகளை துன்புறுத்தவுது நமது நோக்கமில்லை. ஆனால் நமது பாரம்பரிய கலாசார விழாவை நடத்த தடையை ஏற்படுத்துவது வருத்தம் அளிக்கிறது. மேலும் இந்த அமைப்பை நமது நடிகர்கள் ஊக்குவிப்பதும் வருத்தம் அளிக்கிறது. ஜல்லிக்கட்டு தடைக்கு காரணமான பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்துகிறது.

ஆர்ப்பாட்டம்

தமிழகம் முழுவதும தலித் மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அலங்காநல்லூர், கடலூர், அரியலூர், விழுப்புரம் உள்பட மாநிலத்தின் பல பகுதிகளிலும் தலித்துகள் பாதிக்கபட்டுள்ளனர். எனவே தலித்துகளுக்கு உரிய பாதுகாப்பு நல்கிட வேண்டும் என்றும், அதிகரிக்கப்பட்டு வரும் வன் கொடுமைகளுக்கு உரிய நடவடிக்கை கோரியும், வருகிற 23–ந்தேதி தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

மேலும் செய்திகள்