ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி போராட்டம்: மதுரையில் 100–க்கும் மேற்பட்டவர்கள் கைது

மதுரையில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 100–க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2017-01-17 22:30 GMT
ஜல்லிக்கட்டுக்காக போராட்டம்

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி அந்த பகுதியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்களை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்தும், ஜல்லிக்கட்டு நடத்தக்கோரியும் மதுரையில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

மதுரை காளவாசல் பகுதியில் முகநூல் நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர் கவுதமன் தலைமையில் 20 பேர் கூடினார்கள். அவர்கள் கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அவர்கள் 20 பேரையும் கரிமேடு போலீசார் கைது செய்தனர்.

அதே போன்று கட்டபொம்மன் சிலை புரட்சிகர மாணவர் முன்னணி அமைப்பினர் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்ட உள்ளதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனே திலகர்திடல், திடீர்நகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு கூடிய 8 மாணவர்களை கைது செய்தனர்.

ஆனையூர் பஸ் நிலையம் அருகே அந்த பகுதியை சேர்ந்த 20 பெண்கள் உள்ளிட்ட 50 பேர் திடீரென்று அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் ஜல்லிக்கட்டை உடனே நடத்த வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும். கைது செய்யப்பட்ட மாணவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். பின்னர் கூடல்நகர் போலீசார் மறியல் ஈடுபட்டவர்கள் அனைவரையும் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செல்லூர் பகுதி மக்கள் தமுக்கம் பகுதியில் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் 15 பேரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அடுத்த அணியாக மேலும் பல மாணவர்கள் வந்து தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்கள் விடிய விடிய அங்கு அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

அதே போன்று ஜான்சிராணி பூங்கா பகுதியில் மறியலில் ஈடுபட்ட 18 பேரை தெற்குவாசல் போலீசார் கைது செய்தனர்.

மாணவர்கள் ஊர்வலம்

மதுரை ஒத்தக்கடை பகுதியில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள், மாடு வளர்ப்பவர்கள் என 300–க்கும் மேற்பட்டவர்கள் நேற்று மதியம் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் மேலூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அனைத்து கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் என சுமார் 500 பேர் நேற்று மாலை மாட்டுத்தாவணி பகுதியில் திடீரென்று கூடினார்கள். அவர்கள் அலங்காநல்லூரில் கைது செய்யப்பட்ட மாணவர்களை விடுவிக்க வேண்டும் என்று கூறி ஊர்வலமாக பெரியார் பஸ் நிலையம் நோக்கி நடந்தனர். அவர்களை போலீசார் காய்கறி மார்க்கெட் அருகே தடுத்து நிறுத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் மாணவர்கள் கோ‌ஷம் எழுப்பி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்