தியாகராஜர் ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை

திருவையாறு தியாக ராஜர் ஆராதனை விழாவில் பஞ்சரத்ன கீர்த்தனை நேற்று நடந்தது. இதில் ஏராளமான இசை கலைஞர்கள் கலந்து கொண்டு இசை அஞ்சலி செலுத்தினர்.

Update: 2017-01-17 22:45 GMT
தஞ்சாவூர்,

ஆராதனை விழா

கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் ஆராதனை விழா தஞ்சை மாவட்டம் திருவையாறில் காவிரி கரையோரம் அமைந்துள்ள அவரது சமாதியில் ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தியாகராஜரின் 170-வது ஆராதனை விழா கடந்த 13-ந்தேதி மாலை 6 மணிக்கு தொடங்கியது. விழாவை சுதாரகுநாதன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து விழா நாட்களில் தினமும் காலை 9 மணி முதல் இரவு 11 மணி வரை வாய்ப்பாட்டு, நாதஸ்வரம், தவில், வயலின், மிருதங்கம், கடம், புல்லாங்குழல், வீணை, கஞ்சிரா போன்ற பல்வேறு வாத்தியங்கள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த இசை கலைஞர்கள் தியாகராஜர் இயற்றிய கீர்த்தனைகளை பாடி அஞ்சலி செலுத்தினர்.

பஞ்சரத்ன கீர்த்தனை

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தியாகராஜர் முக்தி அடைந்த புஷ்யபகுல பஞ்சமி திதியான நேற்று தியாகராஜருக்கு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதையொட்டி திருவையாறு திருமஞ்சனவீதியில் உள்ள தியாகராஜர் வாழ்ந்த வீட்டில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர் அங்கிருந்து தியாகராஜர் சிலை உஞ்சவிருத்தி பஜனையுடன் ஊர்வலமாக புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஆராதனை பந்தலை வந்தடைந்தது.

ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் தியாகராஜர் மற்றும் அவரது சீடர்கள் போல் உடையணிந்து தியாகராஜர் இயற்றிய பாடல்களை பாடிவந்தனர். அதைத்தெடர்ந்து காலை 9 மணிக்கு தியாகராஜர் சமாதியில் உள்ள அவரது சிலைக்கு அபிஷேகம் நடைபெற்றது. அப்போது இசை கலைஞர்கள் சுதாரகுநாதன், மகதி, மகாநதிஷோபனா, அருண், டி.ஆர். கோவிந்தராஜ், கர்நாடக சகோதரர்கள், பிரியா சகோதரிகள், சாருமதி, உமையாள்புரம் சிவராமன், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், ஏ.கே.பழனிவேல் உள்பட நாடுமுழுவதும் இருந்து வந்திருந்த 1000-க்கும் மேற்பட்ட இசை கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி தியாகராஜருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். அதன் பின்னர் தியாகராஜருக்கு தீபாராதனை நடைபெற்றது.

வீதி உலா

விழாவில் தியாகபிரம்ம மகோத்சவ சபை தலைவர் ஜி.ஆர்.மூப்பனார், அறங்காவலர்கள் சுரேஷ் மூப்பனார், சந்திரசேகரமூப்பனார், தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, இல.கணேசன் எம்.பி., சிட்டி யூனியன் வங்கி தலைவர் பாலசுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காலை 10.30 மணிக்கு விசாகாஹரி குழுவினரின் ஹரிக்கதையும், 11 மணிக்கு தாமல் ராமகிருஷ்ணன் உபயன்யாசமும், இரவு 7.40 மணிக்கு மகதி பாட்டும் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு தியாகராஜர் வீதி உலா நடைபெற்றது. இரவு 8.20 மஹாநதி ஷோபனா பாட்டும், இரவு 9 மணிக்கு பிரபல திரைப்பட பின்னனி பாடகர் கே.ஜெ.ஏசுதாஸ் பாட்டும் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவத்துடன் விழா முடிவடைந்தது.

விழா ஏற்பாடுகள்

விழாவுக்கான ஏற்பாடுகளை தியாகபிரம்ம மகோத்சவ சபைதலைவர் ஜி.ஆர்.மூப்பனார், சபை செயலாளர்கள் அரித்துவாரமங்கலம் பழனிவேல், ஸ்ரீமுஷ்ணம் ராஜாராவ், உதவி செயலாளர்கள் ஓ.எஸ்.அருண், கோவிந்தராஜன், அசோக்ரமணி, பொருளாளர் கணேஷ், அறங்காவலர்கள் சந்திரசேகர மூப்பனார், சுரேஷ்மூப்பனார், டெக்கான்மூர்த்தி, கணேசன், பஞ்சநதம், சீனிவாசன் ஆகியோர் செய்திருந்தனர். விழாவையொட்டி பலத்த போலீஸ்பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்