கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி மனித சங்கிலி போராட்டம்

ஜல்லிக்கட்டு நடத்தி கைதானவர்களை விடுதலை செய்யக்கோரி கும்பகோணத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

Update: 2017-01-17 22:45 GMT
கும்பகோணம்,

தடையை மீறி ஜல்லிக்கட்டு

சுப்ரீம் கோர்ட்டு விதித்த தடையை மீறி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதுதொடர்பாக கைது செய்யப்பட்டவர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கும்பகோணத்தில் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. நாம் தமிழா் கட்சி, விஜய்சேதுபதி நற்பணி மன்றத்தினர் மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.

கோஷம் எழுப்பினர்

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கும்பகோணம் உச்சிப்பிள்ளையாா் கோவிலில் இருந்து நாகேஸ்வரன் வடக்கு வீதி, கீழ வீதி சந்திப்பு வரை கைகோர்த்தபடி நின்று கோஷம் எழுப்பினர். போராட்டத்திற்கு நாம் தமிழா் கட்சியின் மாவட்ட செயலாளா் வக்கீல் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகி மணிசெந்தில் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்