கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்

அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த கோடாலிகருப்பூர் கிராமத்தில் உள்ளவர்கள் பொன்னாற்று பாசன நீரை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர்.

Update: 2017-01-17 22:45 GMT
தா.பழூர்,

நடப்பாண்டில் போதிய மழை பெய்யாததாலும், பாசன நீர் சரிவர கிடைக்காததாலும் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் தா.பழூர் வட்டார வேளாண்மை அதிகாரிகள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், கோடாலிகருப்பூர் பகுதியில் வறட்சி சேதம் குறித்து கணக்கெடுத்து அறிக்கை தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த கணக்கெடுப்பில் பல விவசாயிகளின் பெயர்கள் விடுபட்டதாக விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதையடுத்து விவசாயிகள் நேற்று அதிகாரிகளிடம், அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அப்போது அதிகாரிகள், அரசு விதிமுறைகள்படி தான் நாங்கள் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்று தெரிவித்தனர். இதில் அதிருப்தி அடைந்த விவசாயிகள் கோடாலிகருப்பூர் கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த கிராம நிர்வாக அலுவலர் அய்யப்பன் விவசாயிகளை சமாதானப்படுத்தி அலுவலகத்தை திறந்து உள்ளே சென்றார். அப்போது அங்கு கூடியிருந்த விவசாயிகள் அவரை உள்ளே வைத்து கதவை பூட்டி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தகவலறிந்து வந்த தா.பழூர் போலீசார் போராட்டம் நடத்திய விவசாயிகளிடம், இதுபற்றி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்