இளம்பெண் கொலை வழக்கில் மேலும் 3 பேர் கைது

செந்துறை அருகே இளம்பெண் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2017-01-17 20:33 GMT
செந்துறை,

இளம்பெண் கொலை

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே கீழமாளிகை கிராமத்திலுள்ள கிணற்றில் 17 வயது இளம்பெண் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிணமாக கிடந்தார். இதையறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இரும்புலிக்குறிச்சி போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.விசாரணையில் அந்த பெண் சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. கீழமாளிகை கிராமத்தை சேர்ந்த இந்து முன்னணி ஒன்றிய செயலாளர் மணிகண்டனும், அந்த பெண்ணும் காதலித்து வந்ததும், இந்த காதல் விவகாரம் வெளியில் தெரிந்ததால் மணிகண்டன் அந்த பெண்ணை ரகசியமாக அழைத்து சென்று அவரை கொலை செய்து கிணற்றில் வீசியதும் தெரியவந்தது.

மேலும் 3 பேர் கைது

அதனை தொடர்ந்து இரும்புலிக்குறிச்சி போலீசார் மணிகண்டனை கைது செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணைக்கு பிறகு மணிகண்டனின் உறவினர்களான அயன்தத்தனூரை சேர்ந்த மணிவண்ணன், வெற்றிச்செல்வன் மற்றும் கீழமாளிகை கிராமத்தை சேர்ந்த திருமுருகன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே, விடுதலை சிறுத்தைகள், பகுஜன் சமாஜ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி யினர் இந்து முன்னணியின் முக்கிய பொறுப்பாளரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து ஏற்கனவே அரியலூர் பஸ் நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தி இருந்தனர். இந்த நிலையில் நேற்று போலீசாரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து அரியலூர் அரசு மருத்துவ மனையில் இருந்து அந்த பெண்ணின் உடலை அவரது உறவினர்கள் பெற்று சென்றனர்.

மேலும் செய்திகள்