கொடுங்கையூரில் ஆட்டோ டிரைவர் கடத்திக்கொலையா? போலீசார் தீவிர விசாரணை

கொடுங்கையூரில் ஆட்டோ டிரைவர் மாயமானார். அவர் கடத்திக் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2017-01-17 20:13 GMT
பெரம்பூர்,

கொடுங்கையூரில் ஆட்டோ டிரைவர் மாயமானார். அவர் கடத்திக் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுமாப்பிள்ளை

சென்னை கொடுங்கையூர் கண்ணதாசன் நகரைச் சேர்ந்தவர் குமாரப்பா. இவரது மகன் பிரவீன்குமார்(வயது 23). ஆட்டோ டிரைவர். கடந்த 5 மாதங்களுக்கு முன்பு இவரும் சென்னை புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஷபானா (21) என்பவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி இரவு சவாரிக்கு சென்ற பிரவீன்குமார் அதன் பின்பு வீட்டுக்கு திரும்பவில்லை. 11-ந்தேதி தனது கணவரை காணவில்லை என ஷபானா கொடுங்கையூர் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீன்குமாரை தேடி வந்தனர்.

நண்பரும் தலைமறைவு

மேலும், இதுபற்றி தீவிரமாக விசாரித்து வந்தனர். விசாரணையில் புளியந்தோப்பை அடுத்த ஓட்டேரி கொசவன்பேட்டையை சேர்ந்த கணேசன்(22). தனியார் கூரியர் நிறுவன ஊழியர். இவரும், பிரவீன்குமாரும் நண்பர்கள் என்றும் கணேசன் பிரவீன்குமாரின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விசாரிப்பதற்காக கணேசனை தேடியபோது அவர் தலைமறைவாகி விட்டார்.

கணேசனின் நண்பர்களிடம் விசாரணை நடத்தியபோது கணேசன் 2 வருடங்களாக ஷபானாவை காதலித்து வந்தது தெரியவந்தது. மேலும், கணேசன், ஷபானா திருமணம் முடிந்த பின்பு “நான் காதலித்த பெண்ணை, காதலித்து திருமணம் செய்துக் கொண்டதற்காக பிரவீன்குமாரை தீர்த்துக் கட்டப்போகிறேன்” என நண்பர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

கடத்திக் கொலையா?

இதனால் பிரவீன்குமார் கடத்திக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும், கணேசனும் தலைமறைவாகி விட்டதால் போலீசாரின் சந்தேகம் வலுத்துள்ளது.

இதுபற்றி புளியந்தோப்பு துணை கமிஷனர் செல்வக் குமார் உத்தரவின் பேரில் கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினவேல் பாண்டியன் தலைமையில் தனிப்படை போலீசார் பிரவீன்குமாரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

மேலும் செய்திகள்