உவரி புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் திரளானவர்கள் கலந்து கொண்டனர்

உவரி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2017-01-17 20:30 GMT

திசையன்விளை,

உவரி புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

புனித அந்தோணியார் ஆலயம்

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள உவரி புனித அந்தோணியார் ஆலயம் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமை தாங்கி, கொடியேற்றினார். அதை தொடர்ந்து பாளையங்கோட்டை மறைமாவட்ட முதன்மை குரு சேவியர் டெரன்ஸ் மறையுரையாற்றினார். ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் கிறிஸ்தவர்கள் நேர்த்தி கடன் செலுத்தினார்கள். கொடியேற்று விழாவில் தமிழகம் மற்றும் கேரளாவில் இருந்து திரளானவர்கள் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான பக்தர்கள் பல்வேறு ஊர்களில் இருந்து பாதயாத்திரையாக வந்து கலந்து கொண்டனர்.

மலையாள திருப்பலி

இந்த திருவிழா வருகிற 29–ந் தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலையும், அதை தொடர்ந்து நற்கருணை ஆசீரும் நடக்கிறது. 12–ம் திருவிழாவான வருகிற 28–ந் தேதி மாலையில் திருவிழா சிறப்பு மாலை ஆராதனையும், 29–ந் தேதி காலை 6.30 மணிக்கு பெருவிழா கூட்டு திருப்பலியை பாளையங்கோட்டை மறைமாவட்ட பி‌ஷப் ஜூடுபால்ராஜ் நடத்தி வைக்கிறார். தொடர்ந்து மலையாள திருப்பலி நடக்கிறது. திருவிழாவையொட்டி நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள முக்கிய ஊர்களில் இருந்தும் உவரிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

திருவிழா ஏற்பாடுகளை பங்கு தந்தைகள் ஜோசப், கிங்ஸ்லின், கிங்ஸ்டன், திருதொண்டர் இன்பென்ட், திருத்தல நிதிக்குழு, பணிக்குழு, பங்கு மக்கள் செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்