பருவ மழை பொய்த்து போனதால் குடங்களில் தண்ணீர் சுமந்து வந்து தர்பூசணி பயிரிடும் விவசாயிகள்
பருவ மழை பொய்த்து போனதால் விவசாயிகள் வீடு மற்றும் குட்டைகளில் உள்ள தண்ணீரை குடங்களில் சுமந்து வந்து தர்பூசணி பயிரிடும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். நெல் பயிர்கள் கருகியது ஊத்துக்கோட்டை அருகே உள்ள கட்சூர், தேவந்தவாக்கம், மெய்யூர், காக்கவாக்கம
ஊத்துக்கோட்டை
பருவ மழை பொய்த்து போனதால் விவசாயிகள் வீடு மற்றும் குட்டைகளில் உள்ள தண்ணீரை குடங்களில் சுமந்து வந்து தர்பூசணி பயிரிடும் பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
நெல் பயிர்கள் கருகியதுஊத்துக்கோட்டை அருகே உள்ள கட்சூர், தேவந்தவாக்கம், மெய்யூர், காக்கவாக்கம், மயிலாப்பூர், பூண்டி, சோமதேவன்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சுமார் 8 ஆயிரம் ஏக்கர் நிலபரப்பில் நெல் சாகுபடி செய்தனர்.
ஆனால் வடகிழக்கு பருவ மழை பொய்த்து போனதால் தண்ணீர் இன்றி நெல் பயிர்கள் கருகி போயின. இதனால் வேதனை அடைந்த விவசாயிகள், கருகிய நெல் பயிர்களில் கால்நடைகளை மேய்ச்சலுக்காக விட்டு விட்டனர்.
குடங்களில் தண்ணீர்இந்தநிலையில் குறைந்த அளவு தண்ணீரை கொண்டு சாகுபடி செய்யும் தர்பூசணி, வெள்ளரிக்காய், மிளகாய் போன்றவைகளை பயிர் செய்ய விவசாயிகள் முடிவு செய்து அதற்கான விதைகள் போட்டனர்.
விதை முளைக்கும் போது தண்ணீர் அவசியம். ஆனால் மழை பெய்யாததால் தண்ணீர் பாய்ச்ச வழி இன்றி விவசாயிகள், தங்கள் பகுதிகளில் உள்ள குட்டைகளில் தேங்கி கிடக்கும் மழைநீர் மற்றும் வீட்டின் குடிநீர் குழாய்களில் வரும் தண்ணீரை குடங்களில் பிடித்து விளை நிலங்களுக்கு சுமந்து சென்று விதை போட்ட இடங்களில் தண்ணீர் பாய்ச்சும் அவல நிலை ஏற்பட்டு உள்ளது.
இதுபற்றி விவசாயிகள் கூறியதாவது:–
கூடுதல் நிவாரணம்பருவ மழை பொய்த்து போனதால் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகி உள்ளது. நெல் பயிர்கள் கருகியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு கூடுதல் நிவாரண தொகை வழங்க வேண்டும்.
தற்போது குறைந்த அளவு தண்ணீரை கொண்டு சாகுபடி செய்யும் தர்பூசணி உள்ளிட்டவைகளை பயிர் செய்து உள்ளோம். அதற்கும் தண்ணீர் இல்லாததால் வீடு மற்றும் குட்டைகளில் இருந்து தண்ணீரை குடங்களில் சுமந்து சென்று விளை நிலங்களில் ஊற்றும் நிலை ஏற்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.