காணும் பொங்கலையொட்டி குமரி சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியது

காணும் பொங்கலையொட்டி குமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியது.

Update: 2017-01-16 23:00 GMT
கன்னியாகுமரி,

கூட்டம் அலைமோதியது


பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி குமரி மாவட்ட சுற்றுலா தலங்களில் கூட்டம் அலைமோதியது. காணும் பொங்கலான நேற்று கன்னியாகுமரியில் சூரிய உதயத்தை பார்ப்பதற்காக அதிகாலையிலேயே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வெளி மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். அவர்கள் சூரிய உதயத்தை பார்த்து ரசித்ததுடன், தங்களது செல்போனிலும் படம் பிடித்துக் கொண்டனர்.

பின்னர் காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம், திருவேணி சங்கமம் போன்ற பகுதிகளில் குடும்பம் குடும்பமாக குவிந்து இருந்தனர். கடலின் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்தை காண படகில் செல்வதற்கு சுற்றுலா பயணிகள் படகுதுறையில் நீண்ட வரிசையில் காத்திருந்ததை காண முடிந்தது. காணும் பொங்கலையொட்டி சொத்தவிளை கடற்கரையிலும் கூட்டம் அலைமோதியது. புதுமண தம்பதியினரும், பொதுமக்களும் ஏராளமானோர் வந்திருந்தனர்.

திற்பரப்பு அருவி


குமரியின் குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் தற்போது மிதமான அளவு தண்ணீர் விழுகிறது. இப்பினும் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். இதேபோல் மாத்தூர் தொட்டி பாலம், வட்டக்கோட்டை, முட்டம் கடற்கரை, பத்மநாபபுரம் போன்ற சுற்றுலா தலங்களிலும் நேற்று கூட்டம் அலைமோதியது.

காணும் பொங்கலையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தர்மராஜன் உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீசார் சாதாரண உடையிலும் ரோந்து பணியில் சுற்றி வந்தனர்.

மேலும் செய்திகள்