பொறையாறு அருகே தடையை மீறி ரேக்ளா பந்தயம்

பொறையாறு அருகே தடையை மீறி நாம் தமிழர் கட்சியினர் ரேக்ளா பந்தயம் நடத்தினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2017-01-16 22:45 GMT
பொறையாறு,

ரேக்ளா பந்தயம்

ஒவ்வொரு ஆண்டும் காணும் பொங்கல் அன்று சென்னை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் நாகை மாவட்டம் திருக்கடையூரில் இருந்து தரங்கம்பாடி வரை கடந்த 40 ஆண்டுகளாக குதிரை-மாடு ரேக்ளா பந்தயம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடத்த சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்தது. இதனால் திருக்கடையூரில் ரேக்ளா பந்தயத்தை நடத்த நாகை மாவட்ட போலீசார் அனுமதி வழங்கவில்லை. இந்த ஆண்டும் நேற்று காணும் பொங்கலையொட்டி ரேக்ளா பந்தயத்தை நடத்த போலீசார் அனுமதிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று காலை திடீரென தடையை மீறி நாம் தமிழர் கட்சியின் நாகை மண்டல செயலாளர் கலியபெருமாள் தலைமையில் கட்சியினர் பொறையாறு அருகே திருக்கடையூரில் ரேக்ளா பந்தயம் நடத்தினர். இந்த பந்தயம் திருக்கடையூரில் இருந்து பிள்ளைபெருமாநல்லூர் வரை நடைபெற்றது. இதில் 10 ஜோடி மாடுகளையும், 4 குதிரைகளையும் கொண்டு ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டது.

முன் அறிவிப்பு

முன்அறிவிப்பு இன்றி திடீரென ரேக்ளா பந்தயம் நடத்தப்பட்டதால் பொதுமக்கள், அதனை காண ஆர்வமுடன் சென்றனர். ஆனால், அதற்குள் ரேக்ளா பந்தயம் முடிந்து விட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை தலைமையில் சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர், பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேல் மற்றும் போலீசார் திருக்கடையூர் பகுதிக்கு விரைந்து சென்றனர். ஆனால், போலீசார் வருவதற்குள் தடையை மீறி ரேக்ளா பந்தயம் நடத்தி விட்டு நாம் தமிழர் கட்சியினர் அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்