காட்டுப்பன்றிகள் அட்டகாசம்; வாழைகள் நாசம்

கல்லிடைக்குறிச்சி அருகே காட்டுப்பன்றிகள் அட்டகாசம் செய்து வாழைகளை நாசம் செய்தன.

Update: 2017-01-16 23:00 GMT
அம்பை,

வனவிலங்குகள்

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலையில் பகுதியில் யானை, புலி, சிறுத்தைப்புலி, செந்நாய், கரடி, காட்டுப்பன்றி உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. தற்போது பருவமழை பொய்த்து போனதால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் வனவிலங்குகள் இரை தேடி அருகில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

கடந்த 12-ந் தேதி யானைகள் கல்லிடைக்குறிச்சி அருகே உள்ள பொட்டல் பகுதியில் புகுந்து ராஜேந்திரன், ரத்னவேல் ஆகியோரது தோட்டத்திற்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நெல், வாழை மற்றும் தென்னை, பனை மரங்களை சாய்த்தன.

காட்டுப்பன்றிகள் அட்டகாசம்

இந்த நிலையில் நேற்று முன்தினம் கல்லிடைக்குறிச்சி அருகே கீழஏர்மாள்புரத்தை சேர்ந்த முருகன், ராமசாமி ஆகியோர் தோட்டத்தில் உள்ள கம்பி வேலிகளை சாய்த்து காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக உள்ளே புகுந்தன. அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழைகளை சாய்த்து நாசம் செய்தன.

உடனே இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அம்பை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இது சம்பந்தமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்