ரூ.1½ கோடியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம் ஆய்வு

பூதப்பாண்டியில் ரூ.1½ கோடி செலவில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடத்தை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2017-01-16 23:00 GMT
நாகர்கோவில்,

ஆய்வு

வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் பூதப்பாண்டியில் ரூ.1½ கோடி செலவில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிட பணிகளை கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்பாக ஒவ்வொரு திட்டத்தின் வாயிலாக பல்வேறு விதமான எந்திரங்களை மானிய விலையில் வழங்கி, அவர்களது வாழ்வாதாரம் உயர வழிவகை செய்து வருகிறது.

சேவை மையங்கள்

அதன் அடிப்படையில் குமரி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் வேளாண் பொறியியல் துறையின் மூலம் தோவாளை வட்டாரத்தில் வேளாண்மை எந்திரமயமாக்கல் துணை இயக்கத்தின் கீழ், ரூ.10 லட்சம் செலவில் வேளாண் எந்திரங்கள் வாடகை சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அகஸ்தீஸ்வரம் மற்றும் முன்சிறை வட்டாரங்களில் ரூ.20 லட்சம் செலவில் இரண்டு வேளாண் எந்திரங்கள் வாடகை சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் செலவில் திருவட்டார், கிள்ளியூர் மற்றும் தக்கலை வட்டாரங்களில் அமைக்கப்பட உள்ள வாடகை சேவை மையங்களை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் கூறினார்.

செயல்பாடுகள்

பின்னர் அந்த சேவை மையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் மூலம் கிடைக்கப் பெறும் லாபம் குறித்து வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

ஆய்வின்போது கலெக்டரின் நேர்முக உதவியாளர்(விவசாயம்) நிஜாமுதீன், பூதப்பாண்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ஹனிஜாய் சுஜாதா, வேளாண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர்கள் ஆனந்தபாபு, ராதாகிருஷ்ணன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி காந்தி, இளநிலைப் பொறியாளர் நாராயணசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் ஆய்வு

ரூ.1½ கோடியில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கட்டிடம்

மேலும் செய்திகள்