குயிலாப்பாளையத்தில் மஞ்சு விரட்டு உற்சாக கொண்டாட்டம் வெளிநாட்டினர் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்

காணும் பொங்கல் பண்டிகையையொட்டி விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே குயிலாப்பாளையத்தில் நேற்று மஞ்சு விரட்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் வெளிநாட்டினர் பலர் கலந்துகொண்டு ஆர்வத்துடன் பார்வையிட்டனர். மஞ்சு விரட்டு விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சர்வதேச ந

Update: 2017-01-16 22:15 GMT

வானூர்,

காணும் பொங்கல் பண்டிகையையொட்டி விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே குயிலாப்பாளையத்தில் நேற்று மஞ்சு விரட்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் வெளிநாட்டினர் பலர் கலந்துகொண்டு ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

மஞ்சு விரட்டு

விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சர்வதேச நகரத்துக்கு அருகே குயிலாப்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையையொட்டி காணும் பொங்கல் தினத்தன்று மஞ்சுவிரட்டு உற்சாகமாக நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் வழக்கம்போல் அங்குள்ள எல்லைபிடாரி அம்மன் கோவில் அருகே உள்ள மந்தைவெளி திடலில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. அங்கு குயிலாப்பாளையம், ஆரோவில் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தங்கள் மாடுகளை குளிப்பாட்டி நன்கு அலங்கரித்து கொண்டு வந்தனர்.

இந்த நிகழ்ச்சிக்காக எல்லைப்பிடாரி அம்மன் உற்சவ மூர்த்தி விசே‌ஷ அலங்காரத்துடன் மந்தைவெளி திடலுக்கு எழுந்தருளினார். அங்கு அம்மனுக்கு விசே‌ஷ பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து கோவில் நிர்வாகிகள் எலுமிச்சை பழங்கள், வாழைப்பழங்களை வீசி எறிந்தனர். அதை அங்கு கூடியிருந்த மக்கள் போட்டி போட்டு எடுத்தனர்.

தொடர்ந்து பகல் 12 மணி அளவில் அதிர்வேட்டுகள் முழங்க மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது நிறுத்தப்பட்டிருந்த மாடுகளை அவற்றின் உரிமையாளர்கள் விரட்டிவிட்டனர். அதனால் சீறிப்பாய்ந்த மாடுகளை இளைஞர்களும், சிறுவர்களும் உற்சாகத்துடன் விரட்டிச் சென்றனர்.

அப்போது விவசாயிகள் தங்கள் நிலத்தில் விளைந்த மாங்காய், புளி, வாழை போன்றவற்றை சூறைவிட்டு மகிழ்ந்தனர்.

வேட்டி–சட்டையில் வெளிநாட்டினர்

இந்த மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியில் புதுச்சேரி, திண்டிவனம் மற்றும் பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு காளைகள் சீறிப்பாய்ந்ததை பார்த்து ரசித்தனர். மேலும் ஆரோவில் சர்வதேச நகரத்தைச் சேர்ந்த வெளிநாட்டினர் பலரும் தமிழர்கள் வேட்டி–சட்டை அணிந்தும், சேலைகள் உடுத்தியும் வந்து மஞ்சுவிரட்டு நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். அதனால் மஞ்சுவிரட்டு விழா களைகட்டியது.

மேலும் செய்திகள்