தாவரவியல் பூங்கா கட்டணத்தை கேட்டு மக்கள் அதிர்ச்சி சிறுவர் ரெயிலும் ஓடாததால் அதிருப்தி
புதுவை தாவரவியல் பூங்காவில் நுழைவு கட்டணத்தை கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிறுவர் ரெயிலும் ஓடாததால் அதிருப்திக்குள்ளானார்கள்.
புதுவையில் காணும் பொங்கலை கொண்டாட நேற்று கிராமப்புற மக்கள் நகரப்பகுதியை நோக்கி படையெடுத்து வந்தனர். பகல் வேளையில் வெயிலாக இருந்ததால் அவர்கள் நிழல் உடைய பாரதி பூங்கா, தாவரவியல் பூங்காவுக்கு சென்றனர்.
தாவரவியல் பூங்காவிற்கு சென்ற கிராமப்பகுதிகளை சேர்ந்த பலரும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம் அங்கு செல்ல நபர் ஒன்றுக்கு (12 வயதுக்கு மேல்) நுழைவுக்கட்டணமாக ரூ.20 வசூலிக்கப்பட்டதுதான். நகரப்பகுதியில் உள்ள மக்களுக்கு இது தெரிந்த விஷயம் என்றாலும் கிராமப்புற மக்களுக்கு இது புதியது என்பதால் அவர்களுக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
அதிருப்திதாவரவியல் பூங்காவிற்குள் செல்ல நுழைவு கட்டணம் என்பது அவசியம்தான். அதை நபர் ஒருவருக்கு ரூ.5 அல்லது ரூ.10 என கட்டணம் வைத்திருக்கலாம். ஆனால் நபர் ஒன்றுக்கு ரூ.20 என்றதுதான் மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கட்டணம் செலுத்தி சென்ற உள்ள சென்ற மக்கள் அங்கிருக்கும் சிறுவர் ரெயில் ஓடாததால் அதிருப்தி அடைந்தனர். குழந்தைகள் விளையாட ஊஞ்சல், சறுக்கு, சீசா போன்ற ஒரு சில அம்சங்களே இருந்தன. சிறுவர் ரெயிலை எதிர்பார்த்து வந்த சிறுவர்கள் அது ஓடாததால் ஏமாற்றம் அடைந்தனர்.
புதுச்சேரியை பொறுத்தவரை பொழுதுபோக்கிற்கு ஒருசில இடங்களே இருக்கும் நிலையில் இதுபோன்ற நிலை இருந்தால் சுற்றுலா பயணிகளை எவ்வாறு ஈர்க்கமுடியும்? என்று பொதுமக்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது?