விளையாட்டு திடல்களாக மாறி வரும் ஏரிகள்

ஆனால் இந்த ஆண்டு மழை பொய்த்துபோனதால் கடும் வறட்சி நிலவுகிறது.

Update: 2017-01-16 21:45 GMT

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பொழியும். அப்போது பெய்யும் மழையினால் புதுச்சேரி பகுதியில் உள்ள ஏரிகள், குளங்கள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி வழியும்.

ஆனால் இந்த ஆண்டு மழை பொய்த்துபோனதால் கடும் வறட்சி நிலவுகிறது. மழை சரிவர பெய்யாததால் பெரும்பாலான ஏரி, குளங்களும் வறண்டு காணப்படுகின்றன. குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலையும் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

வறண்டு கிடக்கும் இந்த ஏரிகளை விவசாயிகள் ஏக்கத்துடன் பார்த்து வருகின்றனர். ஆனால் காய்ந்து கிடக்கும் இந்த ஏரிகள் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் சந்தோசத்தை கொடுத்துள்ளது.

ஏனெனில் நகரப்பகுதியில் உள்ள பெரும்பாலான விளையாட்டு திடல்கள் பெரும்பாலும் பொழுதுபோக்கு அம்சங்களுக்காக வழங்கப்படுகிறது. எனவே நகரப்பகுதி இளைஞர்கள் விளையாடுவதற்கு போதிய இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.

அவர்கள் தற்போது வறண்டு கிடக்கும் இந்த ஏரிகளை விளையாட்டு திடல்களாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். கிரிக்கெட், வாலிபால், கால்பந்து போன்ற விளையாட்டுகளை சந்தோசமாக இங்கு விளையாடி வருகின்றனர்.

இளைஞர்களுக்கு இந்த ஏரிகள் விளையாட்டு திடல்களாக மாறி சந்தோசத்தை கொடுத்தாலும் உணவளிக்கும் விவசாயிகளுக்கு தீராக ஏக்கத்தை தருவதாகவே ஏரிகளின் தற்போதைய நிலை உள்ளது.

கடந்த ஆண்டு இதே நாளில் ததும்பிய நிலையில் இருந்த ஏரிகள் இப்போது வறண்டு காணப்படுகிறது. தற்போது கவர்னரின் நேரடி கண்காணிப்பில் வேல்ராம்பட்டு ஏரி செம்மைப்படுத்தப்பட்டு நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மற்ற ஏரிகளையும் தூர்வாரி பராமரிக்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் தண்ணீர் பிரச்சினை வராமல் இருக்கும். இதுவே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மேலும் செய்திகள்