ஊட்டி அருகே கில்லி பண்டிகை கொண்டாடிய கோத்தர் இன மக்கள்

ஊட்டி அருகே கோக்கால் கிராமத்தில் கோத்தர் இன மக்கள் தங்களது பாரம்பரிய ஆடையை அணிந்து நேற்று கில்லி பண்டிகையை கொண்டாடினார்கள்.

Update: 2017-01-16 22:00 GMT
கோத்தர் இன மக்கள்

நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் கோத்தர் இன ஆதிவாசி மக்கள் பெரும்பாலும் விவசாயம், கால்நடை வளர்த்தல் உள்ளிட்ட தொழில்களை செய்து வருகின்றனர். கோத்தர் இன மக்கள் அய்யனோர், அம்மனோர் தெய்வத்தை வழிபட்டு வருகின்றனர். இவர்கள் டிசம்பர் அல்லது ஜனவரி மாதத்தில் அய்யனோர், அம்மனோர் பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

இந்த பண்டிகையை முன்னிட்டு கோத்தர் இன மக்கள் விரதம் இருந்து தங்களது குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். பின்னர் அனைவரும் தங்களது பாரம்பரிய ஆடைகளை அணிந்து, பாரம்பரிய இசைக்கருவிகளை இசைத்தபடி ஆடி பாடி மகிழ்வார்கள்.

கில்லி பண்டிகை

அய்யனோர், அம்மனோர் பண்டிகை முடிந்த பின்னர் கோத்தர் இன மக்கள் கில்லி பண்டிகையை கொண்டாடுகின்றனர். இதனை அவர் களது மொழியில் ‘பில்ஆஸ் பப்ம்‘ என்று அழைக்கின்றனர். தமிழகத்தின் பிரபல விளையாட்டான கில்லியை இவர்கள் பல தலைமுறைகளை கடந்து தற்போதும் விளையாடி வருகின்றனர்.

கோத்தர் இன மக்கள் வருடத்திற்கு ஒரு நாள் மட்டுமே இந்த கில்லி விளையாட்டை விளையாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டுக்கான கில்லி பண்டிகை நேற்று ஊட்டி அருகே உள்ள கோக்கால் கிராமத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோத்தர் இன பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தங்களது பாரம்பரிய ஆடைகளை அணிந்து வந்தனர்.

விருந்து

விழாவில் கோத்தர் இன ஆண்கள் 3 அணிகளாக பிரிந்து கில்லி விளையாட்டை விளையாடினர். கில்லி விளையாடும் முன்பு தங்களது குல தெய்வ கோவிலில் வழிபட்டனர். பல தலை முறைகளாக நடத்தப்படும் இந்த விளையாட்டில் இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு விளையாடி மகிழ்ந்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு கோத்தர் இன மக்கள் தங்களது வீடுகளில் தேன், சாமை, நெய் பணியாரம் உள்ளிட்ட அறுசுவை உணவுகளை தயார் செய்தனர். ஒவ்வொருவரின் வீடுகளில் தனித்தனியாக இந்த உணவுகள் சமைத்து பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் கோத்தர் இன மக்கள் அனைவரும் ஒன்று கூடி சமைத்த உணவை சாப்பிட்டனர். 

மேலும் செய்திகள்