கோவையில் குடிநீருக்கு ஆபத்து: பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுமான பணிகளை தொடங்கியது கேரள அரசு
பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளது. இதனால் கோவையின் குடிநீருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
கோவையின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் சிறுவாணி அணை வற்றி விட்டது. இதனால் கோவையின் குடிநீர் தேவையை பில்லூர் முதல் மற்றும் 2–வது திட்டம் மூலம் கிடைக்கும் நீரை கொண்டு கோவை மாநகராட்சி சமாளித்து வருகிறது. பில்லூர் அணைக்கு பவானி ஆற்றில் இருந்து தான் தண்ணீர் வருகிறது. ஆனால் அந்த தண்ணீரை தடுத்து நிறுத்தும் வகையில் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழக பகுதியான அப்பர் பவானி என்ற இடத்தில் பவானி ஆறு உற்பத்தியாகிறது. அங்கிருந்து உற்பத்தியாகும் பவானி ஆறு கேரள மாநிலம் முக்காலி என்ற இடத்தில் கேரளாவுக்குள் செல்கிறது. அதன்பின்னர் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வழியாக பாய்ந்து சாவடியூர் என்ற கேரள பகுதியிலிருந்து வெளியேறி மீண்டும் தமிழகத்துக்குள் பவானி ஆறு வருகிறது.
கோவையை அடுத்த அத்திக்கடவு அருகே முள்ளி என்ற இடத்தில் பில்லூர் அணையில் பவானி சேருகிறது. அதன்பிறகு பில்லூர் அணையிலிருந்து மேட்டுப்பாளையம் வழியாக பவானிசாகர் வழியே காவிரி ஆற்றில் கலந்து அதன்பின்னர் கடலில் சேருகிறது. தமிழகத்தின் 2–வது பெரிய ஆறு பவானி ஆறு ஆகும்.
தடுப்பணைகோவையை அடுத்த மாங்கரை–அட்டப்பாடி–தாவடியூர் என்ற இடத்தை அடுத்துள்ள தேக்குவட்டை என்ற இடத்தில் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தற்போது தடுப்பணை கட்ட முடிவு செய்துள்ளது. இந்த பகுதி கோவையிலிருந்து ஏறத்தாழ 40 கிலோ மீட்டர் தூரத்தில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. சிறுவாணி ஆறு பவானி ஆற்றில் சேருவதற்கு முன்பே உள்ள தேக்குவட்டை என்ற இடத்தில் தடுப்பணை கட்டப்பட உள்ளது.
இதற்கான ஜல்லி போன்ற கட்டுமான பொருட்களும், கான்கிரீட் கலவை எந்திரங்களும் அணை கட்டப்படும் இடத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. தடுப்பணை கட்டுவதற்காக அந்த இடத்தை தற்போது பொக்லைன் எந்திரம் மூலம் சமப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. தடுப்பணை கட்டும் பணி தனியார் நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக தனியார் நிறுவனத்துக்கு கேரள அரசு டெண்டர் விட்டு அந்த இடத்தில் அஸ்திவாரம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. பவானி ஆற்றில் தடுப்பணை கட்டினால் அது கோவையின் குடிநீர் தேவைக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிது.
குடிநீருக்கு ஆபத்துகோவையில் சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகளிலிருந்து எடுக்கப்படும் குடிநீரை கொண்டு தான் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. அணை நிரம்பி இருக்கும் போது சிறுவாணியிலிருந்து தினமும் 11 கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்பட்டது. இதே போல பில்லூர் முதலாவது திட்டத்திலிருந்து தினமும் 8 கோடி லிட்டரும், 2–வது திட்டத்திலிருந்து 11 முதல் 12 கோடி லிட்டர் தண்ணீரும் எடுக்கப்படுகிறது. இதில் சிறுவாணி அணை தற்போது வறண்டு விட்டதால் அதிலிருந்து எடுக்கப்பட்டு வந்த 11 கோடி லிட்டர் தண்ணீர் இப்போது கிடைப்பதில்லை.
ஆனால் பில்லூர் அணையிலிருந்து எடுக்கப்படும் தண்ணீரை கொண்டு தான் கோவை மாநகராட்சி நிலைமையை சமாளித்து வருகிறது. கோவையின் குடிநீர் தேவையில் 30 சதவீத தண்ணீரான சிறுவாணி நீர் நின்று போனதால் தற்போது கோவையின் பெரும்பாலான இடங்களில் 15 முதல் 20 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
இந்த நிலையில் பில்லூர் அணையின் ஆதாரமாக விளங்கி வரும் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணையை கேரளா கட்ட உள்ளதால் பில்லூர் அணைக்கு வரும் தண்ணீர் பெரும் அளவில் குறைந்து விடும். இதனால் கோவையின் குடிநீர் ஆதாரம் பெரும் அளவில் பாதிக்கப்படும். கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டமும் பில்லூர் குடிநீர் திட்டத்தை நம்பி தான் நிறைவேற்றப்பட உள்ளது. எனவே பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணைகள் கட்டினால் கோவையில் குடிநீருக்கே ஆபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்துக்கு அதிர்ச்சிகடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் மன்னார்காடு தாலுகா சித்தூர் அருகே அகழி என்ற இடத்தில் சிறுவாணி ஆற்றின் குறுக்கே ரூ.900 கோடி செலவில் 500 மீட்டர் நீளத்திலும், 50 அடி உயரத்திலும் அணை கட்ட கேரள அரசு திட்டமிட்டது. ஆனால் அதற்கு தமிழகத்தின் சார்பில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால் அந்த திட்டத்தை கேரள அரசு கைவிட்டது.
தமிழகத்தின் எதிர்ப்பை தொடர்ந்து கேரள அரசுக்கு மத்திய சுற்று சூழல் துறை அமைச்சகம் கொடுத்த அனுமதியையும் வாபஸ் பெற்றுக்கொண்டது. இந்த நிலையில் பவானி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுத்து வருவது தமிழக மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
–