சேலம் அருகே துணிகரம்: கல்லூரி பேராசிரியர் உள்பட 4 பேரின் வீடுகளில் 65 பவுன் நகைகள் கொள்ளை

சேலம் அருகே கல்லூரி பேராசிரியர் உள்பட 4 பேரின் வீடுகளில் 65 பவுன் நகைகள் மர்ம கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2017-01-16 22:45 GMT

பனமரத்துப்பட்டி,

கல்லூரி பேராசிரியர்

சேலம் மாவட்டம், மல்லூர் அருகே உள்ள தாசநாயக்கன்பட்டி கிராமம் எஸ்.கே. சிட்டியில் பிளாக்–2 வில் வசித்து வருபவர் சரவணராஜ் (வயது 40). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சுமதி(39). இவர் சேலத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊரான ஈரோட்டுக்கு கடந்த 14–ந் தேதி சென்றனர்.

இந்த நிலையில் நேற்று காலை பூட்டியிருந்த இவர்களின் வீடு திறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் சரவணராஜிக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அவர்கள் வீட்டுக்கு விரைந்து வந்து பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு பூட்டுகள் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் பீரோவில் வைக்கப்பட்டு இருந்த 20 பவுன் நகைகள் மர்ம கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தனியார் மருத்துவ நிறுவன மேலாளர்

இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்தவரும், சேலத்தில் உள்ள தனியார் மருத்துவ நிறுவனத்தில் மண்டல மேலாளராக பணிபுரிந்து வருபவருமான பிரபாகரன்(46) என்பவரின் வீடும் திறந்து கிடந்துள்ளது. அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்று இருந்தார்.

இந்த நிலையில் வீடு திறந்து கிடக்கும் தகவலை அக்கம்பக்கத்தினர் பிரபாகரனுக்கு தெரிவித்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சுரேஷ்குமார்(41), மல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் மணிசேகர்(52) ஆகியோரின் வீடுகளும் திறந்து கிடப்பது தெரியவந்தது.

65 பவுன் நகைகள் கொள்ளை

இவ்வாறு ஒரே பகுதியில் 4 வீடுகளின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவுகள் திறந்து கிடப்பது குறித்து பொதுமக்கள் மல்லூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) நடராஜன், சப்–இன்ஸ்பெக்டர் ரவித்திரி வெங்கடேசன் ஆகியோர் அங்கு விரைந்து வந்து அந்த 4 வீடுகளிலும் விசாரணை நடத்தினர். இதில் அந்த 4 வீடுகளிலும் 65 பவுன் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றுள்ளது தெரியவந்தது.

இது தொடர்பாக போலீசார் கூறியதாவது:–

கல்லூரி பேராசிரியர் சரவணராஜ் வீட்டில் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம கும்பல் 20 பவுன் நகையை கொள்ளையடித்துள்ளது. மருத்துவ நிறுவன மேலாளர் பிரபாகரன் சென்னையில் உள்ளார். அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போது, அவர் வீட்டில் 45 பவுன் நகையும், 3 கிலோ வெள்ளியும் வைத்திருந்ததாக கூறினார். இருந்தாலும் அவர் நேரில் வந்தால் தான் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் உண்மையான மதிப்பு தெரியவரும்.

இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி சுரேஷ்குமார், அரசு பள்ளி ஆசிரியர் மணிசேகர் ஆகியோர் வீடுகளில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஆனால் அங்கு பெரிய அளவில் பொருட்கள் கொள்ளை போகவில்லை. எனினும் என்னென்ன பொருட்கள் கொள்ளை போய் உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதனிடையே கொள்ளை சம்பவம் நடந்த வீடுகளுக்கு சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டார். இந்த சம்பவம் குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 4 வீடுகளில் கொள்ளை அடித்த மர்ம கும்பலை வலைவீசி தேடிவருகிறார்கள்.

சேலம் அருகே தாசநாயக்கன்பட்டியில் ஒரே நாளில் பூட்டி இருந்த 4 வீடுகளில் பூட்டை உடைத்து 65 பவுன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட துணிகர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்