கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடிநீர் குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர்
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.
ராமநாதபுரம்,
தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்து போனதால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விட்டதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுதவிர பல இடங்களில் உப்பு தண்ணீர் கூட கிடைக்காமல் மக்கள் பரிதவித்து வருகின்றனர். மற்ற மாவட்டங்களை விட ராமநாதபுரம் மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது.
காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு ஓரளவு குடிநீர் கிடைத்து வருகிறது. இந்த குடிநீர் குழாய்களையும் சில இடங்களில் சமூகவிரோதிகள் உடைத்து பொது பயன்பாட்டிற்காகவும், குளிப்பதற்காகவும், வாகனங்களை கழுவுவதற்காகவும் பயன்படுத்தி வருகின்றனர்.
உடனடியாக சரி செய்ய வேண்டும்அதுபோன்று சேதப்படுத்தப்படும் குழாய்களை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அவ்வப்போது பழுது பார்த்து சீரமைத்து வருகின்றனர். இந்த நிலையில் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாக பகுதியில் கடந்த 2 நாட்களாக குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. அதாவது ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கோர்ட்டு பகுதியில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை கட்டிடம் மற்றும் பராமரிப்பு அலுவலக நுழைவுவாயில் பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து அந்த கால்வாய் முழுவதும் தண்ணீர் ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கிறது.
குடிப்பதற்கு தண்ணீர் இன்றி அவதிப்பட்டு வரும் நிலையில் இவ்வாறு குடிநீர் வீணாக செல்வது வேதனை அளிப்பதாக உள்ளதாகவும், இதுசம்பந்தமாக அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.