திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற அண்ணாமலையார் வழிநெடுகிலும் பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலையில் கிரிவலம் சென்ற அண்ணாமலையாரை பக்தர்கள் வழிநெடுகிலும் நின்று தரிசனம் செய்தனர்.

Update: 2017-01-16 23:00 GMT

திருவண்ணாமலை,

வண்டு உருவில்.....

அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் மலையே சிவனாக வணங்கப்படுவதால் இங்கு கிரிவலம் செல்வது மிகவும் சிறப்பானதாக பக்தர்கள் கருதுகின்றனர். அதன்படி பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலையை சுற்றி கிரிவலம் சென்று வருகிறார்கள். கார்த்திகை தீபம் மற்றும் சித்ரா பவுர்ணமியன்று நடக்கும் கிரிவலத்தில் இதனை விட பல மடங்கு பக்தர்கள் கலந்து கொள்வர்.

அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா மற்றும் பொங்கலையொட்டி நடக்கும் திருவூடல் திருவிழா முக்கியமானதாகும். இந்த விழாவையொட்டி கார்த்திகை தீப திருநாளுக்கு மறுநாளும், திருவூடல் திருவிழா நடக்கும் மாட்டுப்பொங்கலுக்கு அடுத்த நாளும் என வருடத்தில் 2 முறை பக்தர்களை போலவே அண்ணாமலையாரும் மலையை சுற்றி கிரிவலம் செல்வது வழக்கம்.

இதற்காக வரலாற்றுடன் தொடர்புடைய நிகழ்வையும் கூறுகின்றனர். பிருங்கி முனிவர் என்பவர் அண்ணாமலையாரை மட்டுமே வணங்கி வந்துள்ளார். ஒரு சமயத்தில் அண்ணாமலையாரும், அம்மனும் ஒன்றாக இருந்தபோது வண்டு உருவில் மாறி அண்ணாமலையாரை மட்டும் சுற்றி வந்து வணங்கியிருக்கிறார். இதனால் சாமிக்கும், அம்மனுக்கும் இடையே ஊடல் ஏற்பட்டு பின்னர் கூடல் ஏற்பட்டதாக ஐதீகம். இது மனித வாழ்வில் கணவன்–மனைவிக்கு இடையே ஊடல் ஏற்பட்டு கூடல் ஏற்படுவது வாழ்வின் ஒரு நிலை என்பதை உணர்த்துகிறது.

இந்த தத்துவத்தை உணர்த்தும் திருவூடல் திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. அப்போது சாமிக்கும், அம்மனுக்கும் ஊடல் ஏற்பட்டு கோவிலுக்கு அம்மன் சென்று விட்டார். அண்ணாமலையார் குமரக்கோவிலுக்கு சென்று விட்டார்.

கிரிவலம்

அங்கிருந்து நேற்று அதிகாலை அண்ணாமலையார் கிரிவலம் புறப்பட்டார். வழிநெடுகிலும் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். இந்த நிலையில் பகல் 1 மணி அளவில் அண்ணாமலையார் மீண்டும் கோவிலை அடைந்தார். அப்போது கோவில் வளாகத்தில் மறுவூடல் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர் விடுமுறையாலும், காணும் பொங்கல் மற்றும் மறுவூடல் விழா என்பதாலும் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிக அளவில் வெளிநாட்டு பக்தர்களும் கோவிலுக்கு வந்திருந்தனர்.

இதனையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டிருந்தன. பக்தர்கள் கொண்டு வரும் உடைமைகள் சோதனை செய்யப்பட்டபின்னரே அவர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் காலை முதல் இரவு வரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மேலும் செய்திகள்