நடத்தையில் சந்தேகம்: மனைவியை கோடரியால் வெட்டிக்கொலை

மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் எழுந்த தகராறில், கிராம வருவாய் அதிகாரி தனது மனைவியை கோடரியால் வெட்டிக் கொலை செய்தார்.

Update: 2017-01-16 22:45 GMT

ஸ்ரீகாளஹஸ்தி,

கிராம வருவாய் அதிகாரி

ராமச்சந்திராபுரம் மண்டலம் சிட்டத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதய்யா (வயது 55). இவருடைய மனைவி புஜ்ஜியம்மாள் (50). இருவருக்கும், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். மகனுக்கும், மகளுக்கும் திருமணம் முடிந்து வெளியூரில் வசித்து வருகின்றனர்.

மாதய்யா கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ராமச்சந்திராபுரத்தில் உதவி கிராம வருவாய் அதிகாரியாக வேலை பார்த்து வந்தார். அவர் பதவி உயர்வு பெற்று, வடமாலப்பேட்டையில் கிராம வருவாய் அதிகாரியாக வேலை பார்த்தார். அங்கு வேலை பார்த்து வந்தபோது, மாதய்யா போலி சான்றுகளை வழங்கி பதவி உயர்வு பெற்றதாக தெரிய வந்தது. அதிகாரிகள் விசாரணை நடத்தி அதனை உறுதிப்படுத்தினர். விசாரணை முடிந்ததும் மாதய்யா கிராம வருவாய் அதிகாரியாக பணியாற்ற தகுதியில்லை எனத் தெரிய வந்தது. அவரை, பணி நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டது.

மனைவி கொலை

இதனால் மாதய்யா வேலை இல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். அப்போது மனைவியின் நடத்தையில் அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. மனைவிக்கும், வேறொரு நபருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த 11–ந்தேதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முடிந்ததும் இருவரும் தூங்க சென்று விட்டனர். புஜ்ஜியம்மாள் தூங்கி கொண்டிருந்தபோது, கோடரியை எடுத்து வந்த மாதய்யா தனது மனைவியின் கழுத்தில் வெட்டினார். அவரின் அலறல் சத்தத்தை கேட்டதும், அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் கோடரியை கீழே போட்டு விட்டு மாதய்யா தப்பி ஓடி விட்டார். புஜ்ஜியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி ருயா ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று பரிதாபமாக செத்தார். கொலை வழக்காக பதிவு செய்து ராமச்சந்திராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான மாதய்யாவை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்